471 நாட்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி, முன்னாளுக்கும் முன்னாள் அமைச்சராக அ.தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு வகித்தபோது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால் வழக்கை எதிர்கொண்டு, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டவருக்கு இத்தனை நாட்கள் கழித்து ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதனை வரவேற்றுள்ள முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘செந்தில்பாலாஜியின் தியாகம் பெரிது. அதைவிட அவரது உறுதி பெரிது’ எனத் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் இது குறித்த விவாதம் எழுந்துள்ளது. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னதே அப்போதைய தி.மு.கதானே? இப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை வரவேற்பது ஏன்? சிறைக்கு சென்றதாலேயே செந்தில்பாலாஜி தியாகிவிடுவாரா? அப்படியென்றால் நாட்டுக்காகப் போராடி சிறை சென்றவர்களை என்னவென்று சொல்வது? என்று எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து பணியாளர்கள பணி நியமனத்திற்காக பணம் வாங்கினார் என்பதுதான் அடிப்படையான குற்றச்சாட்டு. இதில் அவருடைய சகோதரர், உதவியாளர் உள்ளிட்டோரும் குற்றம்சாட்டப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சியில் செந்தில்பாலாஜி மீது மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஏன், ஜெயலலிதாவே சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்தான். அந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. அப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருடன் கூட்டு சேர்ந்து சொத்து குவித்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவித்தனர். சிறைவாசம் முடித்து வெளியே வந்த சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் ‘தியாகத்தலைவி’ என்கிறார்கள்.
செந்தில்பாலாஜி விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி, 15 மாதகாலம் ஜாமீனுக்காகப் போராடியதன் பின்னணிதான் அவர் மீது கட்சித் தலைமை கவனம் செலுத்துவதற்கு காரணமாக உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பா.ஜக.-அ.தி.மு.க. கூட்டணி அமைந்ததால் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பெரும்பாலானவர்கள் மீது சட்டநடவடிக்கை பெரிதாகப் பாயவில்லை. செந்தில்பாலாஜியோ டி.டி.வி.தினகரன் பக்கம் இருந்தார். தினகரனுக்குப் பொறி வைத்த பா.ஜ.க. அவரை திகார் சிறைக்கு அனுப்பியது. செந்தில்பாலாஜி தனது தாய்க்கழகமான தி.மு.க.வுக்கு வந்தார்.
தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் கடும் சவாலாக இருந்தார். நாடாளுமன்ற-சட்டமன்ற-உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க.வின் தமிழகக் கணக்கு தப்புக்கணக்காகப் போனதற்கு செந்தில்பாலாஜியின் வியூகங்களே காரணம் என்ற கோபமே செந்தில்பாலாஜியின் அ.தி.மு.க ஆட்சிக்காலத்து வழக்கு அமலாக்கத்துறையால் விரைவுபடுத்தப்பட்டு கடும் நெருக்கடி கொடுப்பதற்கு காரணமாக இருந்தது.
பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்படுவதும், பா.ஜ.க.வுக்கு அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வேகம் பெறுவதும் மோடி அரசின் நடவடிக்கையாக இருப்பதைத் தொடர்ந்து காணலாம். அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மணீஸ் சிசோடியா போன்றவர்கள் இதற்கான உதாரணங்கள். செந்தில்பாலாஜி மீதும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையும் இதே வகையில் அமைந்தது. பா.ஜ.க.வில் சேரும்படி வலியுறுத்துகிறார்கள் என்று செந்தில்பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கின்ற அளவிற்கு இந்த வழக்கின் போக்கு சென்றது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். பணப்பரிவர்த்தனை தொடர்பாக தீர்ப்பு வழங்காமல் முடிவு செய்ய முடியாது என்பதையும், விசாரணைக் கைதியாக நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில்தான், 15 மாதங்களாக ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அரசியல் என்பது புனிதப்பட்டம் கிடைக்கக்கூடிய இடமல்ல. பொது செயல்பாட்டுக்கான இடம். அந்த செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே பாராட்டும் குற்றச்சாட்டும் அமையும். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி விவகாரத்தில் பா.ஜ.க. தரப்பும் அமலாக்கத்துறையும் காட்டிய அதீத ஆர்வமும், அதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளும்தான் அவர் தியாகியா என்ற கேள்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.