பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது மட்டுமே போதுமா? என்றால் ’இல்லை’ என்றுதான் தொடரும் சம்பவங்கள் பதிலளிக்கின்றன. அதனால்தான் கடுமையாக்கப்படும் சட்டங்கள் தொடர்பான ஆய்வுகள் அவசியமாகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டில் டிசம்பர் 16 ஆம் தேதி அன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா 16 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கி எடுத்தது இந்த சம்பவம். இந்த சம்பவத்தை கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன.
நிர்பயா மரணத்தின் எதிரொலியாக பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. பல மாநில முதல்வர்களும் பொதுமக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் குரலை ஆமோதித்தனர்.
தமிழ்நாட்டில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், மக்களின் இந்த உணர்வுகளை புரிந்துகொண்டு, பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்படும் என்று 1.1.2013இல் அறிவித்தார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க செய்யும் வகையில், குண்டர் தடுப்புச் சட்டத்தை திருத்தவும் உத்தரவிட்டார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதுடன், அந்த நீதிமன்றங்களில் அரசு பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார்.
பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இரசாயண முறையில் ஆண்மை நீக்கம் செய்து, அதிகபட்ச தண்டனை அளிக்க சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், பாலியல் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு சட்டங்கள் வலிமைப்படுத்தப்படும். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மகளிர் சிறப்புப்படை அமைக்கப்படும் என்றெல்லாம் 13 அம்ச திட்டத்தை அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா.
13 அம்ச திட்டங்களை அறிவித்ததில் அக்கறை காட்டிய ஜெயலலிதா அரசு, அந்த திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை.
அதனால்தான் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வெடுத்து வந்த சிறுதாவூர் பங்களா இருக்கும் பகுதியிலேயே சாப்ட்வேர் இன்ஜினியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிர்ப்பலியாகி கிடந்தார். திருவைகுண்டம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிர்ப்பலியாகி கிடந்தார். பெரும்பாக்கத்தில் ஐ.டி. துறையைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி குற்றுயிராக கிடந்தார். அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி 17 பேரால் சிதைக்கப்பட்ட மாபாதகச் செயலும் நடந்தது. திருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பொள்ளாச்சியில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர்.
நிர்பயா சம்பவத்தின் எதிரொலியாக சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று அதிமுக ஆட்சி அறிவித்தாலும் கூட, அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால்தான் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்தன. 2011இல் அதிமுக ஆட்சி அமைத்ததில் இருந்து, 2021 வரையிலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருந்ததை தேசிய அளவிலான புள்ளி விவரங்களே தெரியப்படுத்தி இருக்கின்றன.
’’திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன. அதனால்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன’’ என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனாலும் தற்போதும் பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன. ஆகவே, பாலியல் குற்றம் புரிவோருக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வன்புணர்ச்சி , மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை ஊழியர், அவரது நெருங்கிய உறவினரால் பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனையை திருத்தி 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டு வன்புணர்ச்சி மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்ணைப் பின் தொடர்ந்தால் வழங்கப்படும் தண்டனையை ஐந்தாண்டுகள் வரை நீட்டித்தும் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக மதுரை, நெல்லை, கோவை, சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க, மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும் என்றும், பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று முன் விடுதலை கிடைக்காத வகையில் தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தப்படும் என்றும் பேரவையில் அறிவித்துள்ளார் முதலமைச்சர்.
பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் சுதந்திரத்தையும் உறுதி செய்ய்ய சட்டங்கள் கடுமையாக்கப்படுவது மட்டும் போதாது. அந்த சட்டங்களின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்று ஆறு மாதத்திற்கொருமுறையாவது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முதல் 20 நகரங்களில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் ஆகிய 8 மாநகரங்கள் இடம் பிடித்திருக்கும் நிலை மாறி, தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய நகரங்களாக மாறும்.