
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கை அசைக்கும் புகைப்படத்துடன் அதே மாதிரி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கையசைக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக செயல் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்று சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. 2024 தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்காததால் அதிமுக கூட்டணியை தொடர்வதாக பிரேமலதா அறிவிக்கவில்லை. 2026 ல் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி? என்ற கேள்வி இருந்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் பிரேமலதாவின் புகைப்படம் ஒப்பீடு என்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சங்கரலிங்கம், தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.
‘’ விஜயகாந்தின் அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே, பிரேமலதா அவருக்கு பின்னால் இருந்தார். அவரது பங்கு, விளம்பரமோ, ஆவேச உரைகளோ அல்ல..! மாறாக, திட்டமிடல், தொடர்பு, மற்றும் அமைப்பின் ஒற்றுமையை பேணுதல் என்பதே..! பல மேடைகளில், தலைவரின் பக்கம் நின்று உரையாற்றிய சில தருணங்கள் இருந்தாலும், அவர் பெரும்பாலும் நிழல் சக்தி போலவே செயல்பட்டார்.
விஜயகாந்த் மறைந்த பின், கட்சி உறுப்பினர்கள் மனத்தளர்ச்சியுடன் இருந்தனர். “இப்போ யார் கூட்டத்தை காக்கப் போகிறார்கள்?” என்ற கேள்விக்கு பிரேமலதா பதில் சொல்ல வேண்டிய சூழல்.
அவர், கூட்டத்தைச் சோதிக்கவோ, புள்ளி விவரங்களை ஆராயவோ செய்யவில்லை. மாறாக, மக்கள் உணர்ச்சியை நேரடியாக தொடும் முடிவுகளை எடுத்தார்.
விஜயகாந்த் நினைவிடம், சாதாரணமாக ஒரு நினைவுச் சின்னமாகவே இருந்திருக்கலாம்.ஆனால், பிரேமலதா அதை ஆலயமாக மாற்றினார். இது ஒரு சாதாரண அரசியல் நடவடிக்கை அல்ல..! இது ஒரு உணர்ச்சி நுண்ணறிவு கொண்ட தந்திரம். இதனால், விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர் என்ற மட்டத்தில் இல்லாமல், மக்கள் மனதில் ஒரு மனித தெய்வமாக அடையாளப்படுத்தப்படுகிறார்.

பலர், “விஜயகாந்த் இல்லையென்றால் கூட்டம் குறையும்” என்று எண்ணினர். ஆனால், பிரேமலதாவின் நடைமுறை காட்டியது வேறு. கூட்டம் குறையவில்லை. அவரின் உரைகள், கூர்மையான தாக்கம் இல்லாமல், நிதானமான உறுதி கொண்டவை.
இது, விமர்சனத்துக்கு நேரடி பதில் அளிப்பதற்குப் பதிலாக, மக்களை ஒரே உணர்வில் இணைப்பதற்கான வழி’’ என்கிறார் பூங்குன்றன் சங்கரலிங்கம்.
அவர் மேலும், ‘’தமிழக அரசியலில், தலைவரின் மறைவுக்குப் பின் கட்சியை காப்பாற்றிய பெண் ஜெயலலிதா. அந்த வரிசையில், பிரேமலதாவும் தன் இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த பாணி, ஆவேசத்திற்கு பதிலாக அமைதியான உறுதி. விஜயகாந்த் எப்படி புரட்சித் தலைவர் எம்ஜிஆரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டாரோ, அதேபோல எனக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா தான் ரோல்மாடல்” என பேசி, பெண்களுக்கான அடுத்த தலைவர் நான்தான் என்று பெண்களை தன்பக்கம் ஈர்க்க நினைக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ற அவருடைய ராஜதந்திரங்கள் என்னையும் கவர்கின்றன’’என்கிறார்.