கடந்த ஜூலை 1ம் தேதி அன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியது நாடு முழுவதும் பரபரப்பான பேசுபொருளானது.
ராகுலின் பேச்சுக்கு பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். சபாநாயகர் ஓம் பிர்லாவிடமும் முறையிட்டனர். இதையடுத்து ராகுலின் பேச்சின் சில பகுதிகளை நீக்கச்சொல்லி உத்தரவிட்டார் சபாநாயகர். தான் தவறாக பேசாதபோது தன் பேச்சின் பகுதிகளை நீக்கியதற்கு அதிருப்தி தெரிவித்தார் ராகுல்.
இந்து மதம் ராகுல் அந்த விவாதத்தின் போது பேசியதும், அதற்கு உடனே எழுந்து பிரதமர் பேசியதும் பெரும் விவகாரமாக வெடித்தது.
‘’மக்களை மத அடிப்படையில் பாஜக பிளவுபடுத்துகிறது; வன்முறையை தூண்டுகிறது’’என்று ராகுல் சொன்னதுமே உடனே குறிக்கிட்ட பிரதமர் மோடி, ‘’ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவதை ஏற்க முடியாது’’ என்றார். இதற்கு ராகுல், தான் தவறாக ஏதும் பேசவில்லை என்று ஆவேசமாக பதில் அளித்தார்.
இதன்பின்னர் ராகுல் பேச்சின் ஒரு பகுதியும், அதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்ததையும் வெட்டி எடுத்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ராகுலின் பேச்சில் தவறு இல்லை என்று ஜோதிர் மடத்தின் 46வது சங்கராச்சாரியார் சாமி அவிமுக் தேஷ்வரானந்தா கூறியிருக்கிறார். அவரின் விளக்கத்தில், ‘’ராகுலின் உரையை நாங்கள் முழுமையாக, கவனமாகக் கேட்டோம். இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்றுதான் அவர் சந்தேகங்களுக்கு இடமின்றி வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், ராகுல் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து அதை மக்கள் முன் வைப்பது தவறானது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.