வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி மறைவைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் கலவரம் வெடித்தது.
ஷெரீஃப் உஸ்மான் ஹாடி உயிரிழப்பு :
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அரசுக்கு எதிராக கடந்தாண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார்.அப்போது போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் இயக்கத்தின் தலைவராக ஷெரீஃப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) இருந்தார்.

இந்த நிலையில், வங்கதேச பொதுத் தேர்தலையொட்டி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து, டாக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தனது பிரசாரத்தை ஹாடி தொடங்கினார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த ஹாடிக்கு வங்கதேசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர், சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் தேசிய நரம்பியல் நிறுவனத்தின் மருத்துவக் குழுக்கள் அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்தன என்றும் ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தது.

மீண்டும் வெடித்த கலவரம் :
இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து செய்தியறிந்தவுடன் தலைநகர் டாக்கா உட்பட வங்கதேசத்தின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள ‘புரோதோம் ஆலோ’ (Prothom Alo) மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து, கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கினர்.அவர்களை சுமார் 4 மணிநேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தினர் மீட்டனர்.
இதேபோல் சட்டோகிராமில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவுக்கு எதிராகவும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பூர்வீக இல்லதிற்கும் தீவைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் அவாமி லீக் கட்சி அலுவலகங்களும் சூறையாடப்பட்டன.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும், வங்கதேச (Bangladesh) அரசின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் வெளியிட்ட செய்தியில், “ஹாடியின் கொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சனிக்கிழமை துக்கம் அனுசரிக்கப்படும், என்றும் நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
