வங்கதேசத்தில் கடந்த ஆண்டு கிளர்ச்சிப் போராட்டங்கள் வெடித்து, பெரும் வன்முறையாக மாறிய நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) அந்த நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

போராட்டத்தின் ஆரம்பம் – இடஒதுக்கீடு சர்ச்சை
அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர் வாரிசுகளுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கிய ஷேக் ஹசீனாவின் முடிவு, 2024 ஜூலையில் மாணவர் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. பின்னர் இது நாடு முழுவதும் வன்முறையாக பரவியது.
இந்த கலவரங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தொடர் குழப்பங்களால் ஹசீனா பதவியை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
வழக்கு மற்றும் தீர்ப்பு
போராட்டத்தை அடக்க போலீசால் நடத்தப்பட்ட வன்முறை நடவடிக்கைகளுக்கு ஹசீனா உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்ட ஆடியோ ஆதாரம் விசாரணையின் முக்கிய தளமாக இருந்தது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal) பதிந்து விசாரணை நடத்தி வந்தது.
தீர்ப்பாயம், “ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் AI மூலம் மாற்றப்படவில்லை” எனத் தெளிவுபடுத்தி, ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி என அறிவித்து மரண தண்டனை வழங்கியது. மேலும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இவரை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் காவல் துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுவை மரண தண்டனையில் இருந்து விடுவித்து, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

ஹசீனாவின் பதில் : தீர்ப்புக்கு முன்
தீர்ப்புக்கு முன்பு வெளியிட்ட ஆடியோவில், ஹசீனா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து,
“என்னை அரசியல் ரீதியாக அழிக்க முயற்சி நடக்கிறது”
“அவாமி லீக் மக்கள் ஆதரவை இழக்காது”
“நான் உயிரோடு இருக்கும் வரை மக்களுக்காகப் பணிபுரிவேன்” என்று வலியுறுத்தினார்.
அவர் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவங்களையும், வீட்டை எரித்த நிகழ்வையும் நினைவு கூர்ந்து, “மக்கள் நீதியே உண்மையான தீர்ப்பு” என கூறினார்.
தீர்ப்புக்கு பின்:
தீர்ப்புக்கு பின் கூறியுள்ள அறிக்கையில், “எனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்புகள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளன. இந்த தீர்ப்புகள் பாரபட்சமானவை மற்றும் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை.
கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே அதனை குடிமக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது.” என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.
வங்கதேசத்தின் தற்போதைய நிலை
இந்த தீர்ப்பால் டாக்கா நகரம் முழுவதும் கோட்டை போல மாறியுள்ளது. ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்.
