வங்கதேசத்தில் நாடு முழுவதும் வெடித்த போராட்டத்தில் அதற்கு மேலும் அங்கிருந்தால் தான் கொல்லப்படுவோம் என்ற நிலையில் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா.
டெல்லியில் ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு கருடா பிரிவு உச்சக்கட்ட பாதுகாப்பினை வழங்கி வருகிறது.
இந்திய ராணுவத்தில் கடந்த 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ‘கருடா’பிரிவு. இந்திய சிறப்பு படைகளில் ஒரு பிரிவுதான் இந்த அதிரடிப்படை. வான் படையின் தளங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதுதான் இப்படையின் முக்கிய நோக்கம்.
கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகள் மூலம் கருடா அதிரடிப்படை வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கருடா பிரிவுக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு தெலுங்கான மாநிலத்தின் துண்டிகல் விமானப்படை அகாடமியில் 72 வாரங்கள் பாராசூட் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
எதிரியின் பிரதேசத்தில் வீழ்ந்த விமானிகளை மீட்பதுவும், எதிரி பிரதேசத்தில் விமானப்படை தளங்களை நிறுவுவதும் கருடாவின் கட்டாயப்பணியாக உள்ளது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் எதிர்ப்பு, பணயக்கைதிகள் மீட்பு, வான்வழி தாக்குதல் போன்றவை கருடாவின் முக்கியப்பணிகள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கருடா பிரிவுதான் டெல்லியில் ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பினை வழங்கி வருகிறது.