தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மாஸ்டர் மைண்ட்:
தமிழ்நாடு அரசின் 49வது தலைமைச்செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1989ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆனவர். காஞ்சிபுரத்தில் 1989ம் ஆண்டில் துணை ஆட்சியராக பணியைத் தொடங்கினார். 1991l கோவில்பட்டி துணை ஆட்சியர் ஆனார். 93ல் வேலூர் கூடுதல் ஆட்சியராகவும், 95ல் கோவை கூடுதல் ஆட்சியாராகவும் இருந்தார். 96 முதல் 98 வரை போக்குவரத்து துறை மேலாண் இயக்குநராக இருந்த சிவ்தாஸ் மீனா, 91ல் இருந்து 2001 வரை நாகப்பட்டின்ம் ஆட்சியராக இருந்தார்.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் அவரின் மாஸ்டர் மைண்டாக இருந்த 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தார் சிவ்தாஸ் மீனா. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, சிவ்தாஸ் மீனாவை தனது செயலாளர் ஆக்க நினைத்தார். அதற்குள் ஒன்றிய அரசு பணிக்கான ஆணை வந்துவிட்டதால் எடப்பாடியின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பின்னர் பலமுறை முயன்று சிவ்தாஸ் மீனாவை மாநிலப்பணிக்கு கொண்டு வரமுடியாமல் ஏமாற்றம் அடைந்தார் எடப்பாடி.
திமுக ஆட்சிக்கு வந்ததும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு கொண்டு வந்ததோடு அல்லாமல் அவரை தலைமைச் செயலாளராகவும் ஆக்கினார். சிவ்தாஸ் மீனாவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குட் புக்கில் இடபெற்றிருந்தார்.
அண்மைக்காலமாகவே சிவ்தாஸ் மீனா தனது வேலைகளில் வேகம் இல்லாதவராக உள்ளார் என்ற புகார் தலைமைக்கு சென்றிருக்கிறது. அதிகாரிகள் மட்டத்திலும் அமைச்சர்கள் வட்டத்திலும் சில சீனியர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார் என்றும் புகார்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த முதல்வர் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருப்பதால் இதையெல்லாம் சமாளிக்கக்கூடிய வகையில் ஒரு நபரை தலைமைச்செயலாளர் ஆக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு ரியல் எஸ்டே ஒழுங்குமுறை ஆணையத்தின் முதல் தலைவர், முன்னாள் தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகனின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையத்து புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவெடுகக் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவின் பரிந்துரையில் சிவ்தாஸ் மீனாவின் பெயரும் இருந்தது. இதற்கிடையில் சிவ்தாஸ் மீனாவின் பதவிக்காலமும் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது என்பதால் சிவ்தாஸ் மீனாவே தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
50ஆவது தலைமைமைச்செயலாளர்:
சிவ்தாஸ் மீனாவிற்குப் பிறகு தமிழ்நாடின் அரசின் 50 ஆவது தலைமைச்செயாளராக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச்செயலாளர் நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச்சேர்ந்தவர் முருகானந்தம். எளிய குடும்பத்தில் இருந்து பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் படிப்புகள் படித்து, லக்னோவில் எம்.பி.ஏ. முடித்தவர். 1991ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும், பல்வேறு துறை செயலாளராகவும் பணியாற்றியவர். தொழில்துறை, நிதித்துறை செயலாளராகவும் இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்தார் முருகானந்தம். கொரோனா காலத்தில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பில் இருந்து அந்த பணிகளை சிறப்பாகச் செய்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது நிதிசிக்கல் நிறைய இருந்த நிலையில், ஒன்றிய அரசும் நிதி ஒதுக்காமல் ஓரவஞ்சனை காட்டி வந்த நிலையில், நிதி ஆதாரங்களை திரட்டி நிதிச்சிக்கலை தீர்க்கும் வகையில் நிதித்துறை செயலாளராக இருந்து முருகானந்தம் பணிபுரிந்ததால் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் இவரை அழைத்து பாராட்டினார்.
பிடிஆரின் தனிச்செயலாளராக இருந்து அவரின் வலதுகரம் ஆனார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முதல் பட்ஜெட்டை தயார் செய்து பாராட்டு பெற்றார் முருகானந்தம்.
தமிழ்நாடு பட்ஜெட்டை உருவாக்கியதில் இவரின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்து முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் இருந்த உதயசந்திரனை நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றிவிட்டு, உதயசந்திரன் இடத்திற்கு முருகானந்தம் கொண்டு வரப்பட்டார்.
மூச்சு முட்டிய நிதிச்சிக்கலில் இருந்து திமுக ஆட்சியை விடுவித்ததால் முதல்வரின் முதன்மைச்செயலாளர் ஆனார். முதல்வரின் வலதுகரம் என்று பேசும்படி இருந்தார் முருகானந்தம். கடந்த மூன்றாண்டுகால திமுக ஆட்சியின் புதிய திட்டங்கள் அனைத்தையும் திறம்பட நிர்வகித்து, அந்த திட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதையும் திறம்பட கண்காணித்து வந்துள்ளார் முருகானந்தம். இவரின் சிறந்த நிர்வாகத்திறன் கவனிக்கப்பட்டு வந்ததால் இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆகவும் உயர்ந்திருக்கிறார்.