
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சிலர் அதிமுகவை கபளீகரம் செய்யவும், ஆட்சியை கவிழ்க்கவும் பார்த்தனர். பாஜகதான அப்போது காப்பாற்றியது. அதனால் பாஜகவுக்கு நன்றி மறவாமல் இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
மேலும், ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை என்றும் கூறி இருக்கிறார். சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை விட, அதிமுகவின் பொதுச்செயலாளர் நாற்காலியில் அழுத்தமாக அமர்ந்துவிட்டாலே போதும் என்ற மனநிலையில் உள்ளார் பழனிசாமி என்ற விமர்சனங்கள் உள்ள நிலையில் பழனிசாமியும் அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் அதிகாரம் முக்கியம் இல்லை என்றிருக்கிறார்.
ஆனால், உங்களுக்கு வேண்டுமானால் ஆட்சி அதிகாரம் முக்கியமில்லாமல் போகலாம். ஆனால் தொண்டர்களுக்கு அது முக்கியம் என்று விளாசி இருக்கிறார் அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி.

இது குறித்து அவர், ‘’ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றால் இந்த முறை ஆட்சிக்கே வரமாட்டோம் என்று முடிவு செய்துவிட்டீர்களா? கட்சி மட்டும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் போதுமா? தனிப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தன்மானத்தை விட, தோல்வியே காணாத எம்.ஜி.ஆரின் தன்மானமும், 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் என்று சொன்ன ஜெயலலிதாவின் தன்மானம், ஒவ்வொரு ஊரிலும் தொடர் 10 தோல்விகளால் நொறுங்கி போயிருக்கிற ஒன்றரை கோடி தொண்டர்களின் தன்மானம் இதெல்லாம் தான் ரொம்ப முக்கியம். உங்களுக்கு உங்கள் தன்மானம் தான் முக்கியம் என்றால் நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
“என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது பாஜக தான். அதற்காக தான் கூட்டணி சேர்ந்தேன்” என்று கூறுகிறீர்களே, ஏன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி அவர்களை எதிர்த்து களம் கண்டீர்கள்? அந்த சமயம் அவர்களுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் NDA கணிசமான தொகுதிகளை பெற்றிருக்கும் மைனாரிட்டி பாஜக அரசு அமைந்திருக்காது அல்லவா?
நாடாளுமன்ற தேர்தலில் திமுக வென்றாலும் பரவாவில்லை என்று கூட்டணியை விட்டு வெளியேறினீர்கள், இப்பொழுதும் திமுக வென்று ஆட்சிக்கு வந்தாலும் பரவாவில்லை தன்மானம் தான் முக்கியம் என்று கட்சியை ஒருங்கிணைக்க மறுக்கிறீர்கள். ஏன் கோடநாடு வழக்கில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, மற்ற அமைச்சர்கள் மீது ஊழல் நடவடிக்கைகள் ஏதும் எடுக்க கூடாது என்று திமுகவுடன் ஏதேனும் ஒப்பந்தம் போட்டுள்ளீர்களா?

உங்கள் சம்பந்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது, உடனே வேலுமணியையும், உங்கள் மகனையும் அமித்ஷாவை சந்திக்க அனுப்பினீர்கள். அவர் ஒரு காலக்கெடு கொடுத்ததும் நீங்களே உடனே சென்று சரணாகதி ஆகி கூட்டணி என்று அறிவித்தீர்கள். இப்போது வந்து எங்களை யாரும் மிரட்ட முடியாது நன்றிக்காக கூட்டணி அமைத்தேன் என்று அவர்கள் திட்டத்தை எல்லாம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் எந்த நன்றிக்காக , உங்கள் சம்பந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட நன்றிக்காகவா?
அதிமுகவை ஒன்றுபடுத்தவில்லை என்றால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது உங்களுக்கே புரிகிறது, அது தான் தொண்டர்களின் விருப்பமும். நீங்கள் வேண்டுமானால் தன்மானம் தான் முக்கியம் என்று ஒதுங்கிக்கொள்ளுங்கள் அதற்காக வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எதிர்பார்ப்பை நாசமாக்காதீர்கள்’’ என்று கேட்டு விளாசி இருக்கிறார் கே.சி.பழனிசாமி.