VIJAY SEEMAN
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கரூர் சம்பவம் நடந்த அன்றிலிருந்து அமைதியாக இருந்து வந்த விஜய், நேற்று பாதிப்பட்டோரை பனையூருக்கு பேருந்தில் அழைத்து வந்து ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.
இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’விஜய் கரூருக்கு சென்றதால் அவரைப் பார்க்க மக்கள் வந்தார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள். அப்படி என்றால் அந்த சம்பவத்திற்கு விஜய்தானே காரணம்.

குற்றம் விஜய்யால்தான் நிகழ்ந்தது. அவரது பெயர் ஏன் வழக்கில் இல்லை. அவருடன் இருந்த ஆதவ் அர்ஜூனா பெயரும் வழக்கில் ஏன்இல்லை? புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் இவர்கள் பெயர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை?
தவெக தரப்பில் தவறு இல்லை என்றால் ஏன் முன்பிணை கேட்கிறார்கள்? முன்பிணை கேட்ட வழக்கை ஏன் திரும்ப பெற்றார்கள்?’’ என்று சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய சீமான், ‘’சிபிஐ விசாரணையிலும் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை. 41 பேர் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பம் விஜய்யை வந்து பார்த்துவிட்டு போகுது. இதில் இருந்தே தெரிகிறது சிபிஐ விசாரணை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று. சிபிஐ விஜயை விசாரிக்குதா? பாதுகாக்குதா?
கரூர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதே விஜயை கூட்டணிக்கு இழுப்பதற்காகத்தான். விஜய் கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால் அவரையும் ஆதவ் அர்ஜுனாவையும் வழக்கில் இழுத்துவிடுவார்கள்’’ என்கிறார்.
