ஒரு பக்கம் அகோரிகள் யாகம், மறுபக்கம் மடாதிபதியின் விருப்பம், டெல்லி பஞ்சாயத்து என்று கர்நாடக அரசியலில் புயலைக்கிளப்புகிறது முதல்வர் நாற்காலி.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்தான் என்று கட்சியினரே கூறிவந்தனர். ஆனால், முன்னாள் முதல்வர் சித்தராமையாதான் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கொடி பிடித்தனர்.
டெல்லி தலைமையிடம் நடந்த பஞ்சாயத்தில் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி என்றும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி என்றும் முடிவானது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவுயும் சிவக்குமார் வசம்தான் உள்ளது.
முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்குள் ஓராயிரம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகாரபோட்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. முதல்வர் நாற்காலிக்கு சிவக்குமார் குறிவைத்திருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக எடுத்துச்சென்றதால், ’’எனக்கு எதிராகவும், சித்தராமையாவுக்கு எதிராகவும் கேரள மாநிலத்தில் ராஜராஜேஸ்வரி கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அகோரிகளால் யாகம் நடத்தப்படுகிறது. கர்நாடக அரசியலில் காங்கிரசை சீர்குலைப்பதற்காக இந்த யாகம் நடக்கிறது. 21 சிவப்பு ஆடுகள், 21 வெள்ளாடுகள், 5 பன்றிகள், 3 எருமைகள் பலியிடப்பட்டு இந்த யாகம் நடக்கிறது’’என்று சொன்ன சிவக்குமார், அந்த யாகத்திற்கு ராஜ கண்டக, மரண மோகன ஸ்தம்பனா யாகங்கள் என்று பெயரை எல்லாம் சொன்ன சிவக்குமார், அந்த யாகத்தை யார் நடத்துகிறார் என்பது பற்றி சொல்லவே இல்லை.
நாடாளுமன்ற தேர்தலுக்காகத்தான் சிவக்குமார் அப்படி சொல்லி சமாளித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது இப்போது மடாதிபதியின் இந்த பேச்சைப்பார்த்தால்.
பெங்களூரு கெம்பேகவுடா ஜயந்தி நிகழ்ச்சியில் பேசிய விஷவ ஒக்கலிகா மகாசமஸ்தான மடாதிபதி குமார சந்திரசேகரநாத சுவாமிஜி, ‘’முதலமைச்சார் அதிகாரத்தை டி.கே.சிவக்குமாரை தவிர எல்லோரும் அனுபவித்துவிட்டனர். முதல்வர் பதவியை ஏற்கனவே அனுபவித்த, இப்போது அனுபவித்துகொண்டிருக்கும் சித்தராமையா இனிவரும் காலங்களிலாவது அந்த பதவியை விட்டுக்கொடுத்து அவரை ஆசீர்வதிக்க வேண்டும். சித்தராமையா மனது வைத்தால்தான் இது நடக்கும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மடாதிபதி கொளுத்திப்போட்டதில் பற்றி எரிகிறது கர்நாடக காங்கிரஸில். இதுகுறித்த சலசலப்புகளுக்கு, ‘’மேலிடம் என்ன கட்டளை இட்டாலும் நாங்கள் அதை பின்பற்றுவோம்’’ என்று நழுவிவிட்டார்.
சித்தராமையாவுக்கு நெருக்கமான அமைச்சர் கே.என்.ராஜண்ணா, ‘’யார்தான் பதவியை விட்டுக்கொடுப்பார்கள். நான் மடாதிபதி ஆகிறேன் என்று கேட்டால் அந்த மடாதிபதி தனது பதவியை விட்டுக்கொடுத்துவிடுவாரா?’’ என்று கேட்டிருக்கிறார்.
ஆக, முதல்வர் நாற்காலி விவகாரம் கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது என்றே தெரிகிறது. சிவக்குமார் தரப்பின் விருப்பம் தெரியாமல், மடாதிபதி அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே பேசப்படுகிறது.
இந்த முதல்வர் நாற்காலி பஞ்சாயத்து விசயமாகத்தான் சித்தராமையாவும், சிவக்குமாரும் டெல்லிக்கு செல்கிறார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், மாநில திட்டங்கள் தொடர்பாக ஒன்றிய அரசின் ஒப்புதல் நிலுவையில் இருக்கிறது. இது பற்றி மாநில எம்பிக்களுடன் விவாதிக்கவே டெல்லி செல்கிறோம் என்கிறார்.
உண்மை என்னவோ?