கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இவருக்கு பதிலாக புதிய ஹீரோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளன.
நடிகர் ஜீவாவின் ‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கோகுல், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’, போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது ‘சிங்கப்பூர் சலூன்’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
இயக்குநர் கோகுல் இயக்கத்தில், கடந்த 2021-ம் ஆண்டு, நடிகர் சிம்பு ‘கொரோனா குமார்’ என்னும் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த இப்படத்தில் நடிக்க சிம்புவிற்கு முன்பணமும் அளிக்கப்பட்டது.
ஆனால் முன்பணம் வாங்கிய நடிகர் சிம்பு படப்பிடிப்பிற்கு வர மறுத்து வந்ததாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
File Pic
இந்த நிலையில் ‘கொரோனா குமார்’ படத்தில் தற்போது சிம்புவிற்கு பதிலாக, விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது காமெடியை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், இதற்கு முன்பு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற காமெடி படங்களில் தனது ஹியூமர் சென்ஸை நீருப்பித்ததால், இந்த படத்திற்கு விஷ்ணு விஷால் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.