ஒரு நாடு எவ்வளவு செல்வமாக உள்ளது என்பதை அறியும்போது, பொருளாதார நிபுணர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Total GDP) என்பதை மட்டும் பார்க்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ஒரு குடிமகனுக்கு சராசரியாக எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை காட்டும் GDP per capita (PPP) என்ற அளவுகோலை அதிகம் பயன்படுத்துகிறார்கள். மேலும், PPP (Purchasing Power Parity) என்றால், ஒரு நாட்டில் உள்ள வாழ்வுச் செலவு, பொருட்களின் விலை, சேவைகளின் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஒரு சாதாரண மனிதன் தனது வருமானத்தால் உண்மையில் எவ்வளவு வாங்க முடியும் என்பதை கணக்கிடுவது ஆகும். அதனால், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை விளக்குகிறது.
இந்நிலையில், World Atlas நிறுவனம், IMF 2025 GDP per capita (PPP) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட பட்டியலின்படி, உலகின் மிகப் பணக்கார நாடுகள் என்றால் அவை பெரிய பரப்பளவு அல்லது அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, சிறிய நாடுகளாக இருந்தாலும் வலுவான நிதி அமைப்பு, அதிக எண்ணெய், எரிவாயு வளங்கள், முன்னேற்றமான தொழில்நுட்பம், குறிப்பிட்ட துறைகளில் சிறப்பு திறன் கொண்ட நாடுகளே, உலகின் மிகச் செல்வமான நாடுகளின் பட்டியலில் இடம் உள்ளன.

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 மிகப் பணக்கார நாடுகள்
1. லிச்சென்ஸ்டைன் (Liechtenstein)
ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய நாடு, உயர்தர உற்பத்தி தொழில்கள் மற்றும் மேம்பட்ட நிதித் துறையால் உலகிலேயே ஒருவருக்கு அதிக வருமானம் கொண்ட நாடாக உள்ளது.
2. சிங்கப்பூர் (Singapore)
சிங்கப்பூர் ஒரு முக்கியமான உலக நிதி மற்றும் வர்த்தக மையம் ஆகும்.இங்கு சேவைத் துறை, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் அரசின் திட்டமிடல் ஆகியவை அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன.
3. லக்ஸம்பர்க்
முதலீட்டு நிதிகள், எல்லை தாண்டிய வங்கி சேவைகள் மற்றும் கார்ப்பரேட் சேவைகள் மூலம் லக்ஸம்பர்க் மிகுந்த செல்வத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இங்கு அரசியல் நிலைத்தன்மை மற்றும் பல மொழி அறிவு கொண்ட தொழிலாளர்கள் இதற்கு ஆதரவாக உள்ளனர்.
4. அயர்லாந்து
தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறைகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் மையமாக அயர்லாந்து விளங்குகிறது. இதனால் உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது.
5. கத்தார்
இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களே கத்தாரின் முக்கிய வருமான ஆதாரம். அதே நேரத்தில், எண்ணெய் சாரா துறைகளை வளர்க்க தேசிய திட்டங்களின் மூலம் முயற்சி செய்து வருகிறது.
6. நார்வே
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு, உலகின் மிகப்பெரிய அரசின் செல்வ நிதிகளில் ஒன்றை நார்வே உருவாக்கியுள்ளது. இந்த வருமானம் சமூக நலன் மற்றும் பொதுச் சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
7. சுவிட்சர்லாந்து
மருந்துத் தயாரிப்பு, நிதி சேவைகள், ஆராய்ச்சி சார்ந்த தொழில்கள் மற்றும் துல்லிய இயந்திர உற்பத்தி ஆகியவை சுவிட்சர்லாந்தின் செல்வத்தின் அடிப்படை ஆகும். இந்த குறைந்த பணவீக்கம் மற்றும் நிலையான அரசியல் அமைப்பு இதனை வலுப்படுத்துகிறது.
8. புரூனே தருஸ்சலாம்
திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் ஹைட்ரோகார்பன் ஏற்றுமதிகள் புரூனேயின் முக்கிய வருமானம் ஆகும்.மேலும், பொருளாதாரத்தை பல்துறை வளர்ச்சிக்குத் திருப்ப முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
9. கயானா
கடலோர எண்ணெய் கண்டுபிடிப்புகள் கயானாவின் பொருளாதாரத்தை மிக வேகமாக உயர்த்தியுள்ளது. மேலும், அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் சேமிப்பு திட்டங்கள் அதன் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன.
10. அமெரிக்கா (America)
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, மேம்பட்ட சேவைத் துறை, நிதி, உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் ஒருவருக்கு வருமான அடிப்படையிலும் முன்னணி நாடாகத் திகழ்கிறது.
இந்தத் தரவரிசைகள் தனிநபர் GDP, வாங்கும் திறன் சமநிலை (PPP) போன்ற பல்வேறு பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
