நான் செய்யும் ஒவ்வொரு இசைக்கச்சேரியும் ஏழைக்குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது என்று சொல்லி நெகிழும் பாடகி பாலக் முச்சால் இதுவரைக்கும் 3 ஆயிரம் ஏழைக்குழந்தைகளுக்கு தனது செலவில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளார்.
பிரபல திரைப்பட பின்னணிப்பாடகி பாலக் முச்சால். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மார்வாடி குடும்பத்தில்30.3.1992ல் பிறந்தவர். நான்கு வயதில் இருந்தே பாடத்தொடங்கி இருக்கிறார். இளங்கலை வணிகவியல் முடித்த பாலக்முச்சால், கடந்த 2011ம் ஆண்டில் இருந்து திரைப்பட பின்னணி பாடகியாக உள்ளார்.
பாலிவுட் படங்களில் பாடி பிரபலம் ஆனார். ஏக் தா டைகர், ஆஷிக்-2, கிக், ஆக்ஷன் ஜாக்சன், மெய்மறந்தேன் பாராயோ, எம்.எஸ்.தோனி, காபில் உள்ளிட்ட 17 படங்களில் பாடியுள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, குஜராத்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடியுள்ளார் பாலக் முச்சால். தவிர நிறைய இசைக்கச்சேரிகளில் பங்கேற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதி தொகையினை எடுத்து ஏழை சிறுவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.
இதுவரையிலும் 3 ஆயிரம் ஏழைக்குழந்தைகளுக்கு இருதய அறுவை செய்து வைத்திருக்கிறார். இருதய பாதிப்பினால் அவதிப்படும் குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு நிதி அளிப்பதற்கென்றே இசைக்கச்சேரிகள் நடத்தி வருகிறார். தனது சகோதரர் பாலாஷ் முச்சாலும் இணைந்து இந்த இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். வெளிநாடுகளிலும் இவரது கட்சேரிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பாலக் முச்சாலின் இந்த சமூக சேவையினால் கின்னஸ் உலக சாதனை, லிம்கா சாதனைகள் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளார்.
பாடகரும் இசையமைப்பாளருமான மித்துனை கடந்த 2022ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் பாலம் முச்சாலின் சேவைகளுக்கு எல்லாம் அவரது கணவர் மித்துன் பக்கபலமாக நின்று வருகிறார்.
கணவர் மித்துன் தன்னை புரிந்துகொண்டு தனக்கு ஆதரவளிப்பதால்தான் திருமணத்திற்கு பிறகும் இந்த சேவையை தொடரமுடிகிறது என்கிறார்.
நான் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி எல்லாம் மித்துனிடம்தான் கலந்தாலோசிப்பேன். அவர் எனக்கு ஊக்கம் தந்து வழிநடத்துகிறார். அவர் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்று சொல்லி நெகிழும் பாலம் முச்சல், ஜூன் 11,2024ல் 3 ஆயிரமாவது இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி அளித்திருக்கிறார்.
நான் எடுத்த சிறிய முயற்சிதான் இப்போது என் வாழ்க்கையின் மிகப்பெரும் பணியாக மாறிவிட்டது. என் மூலமாக 3 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன என்பதை பெரிய மைல்கல்லாக கருதுகிறேன்.
தற்போது 413 ஏழைக்குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்காக என்னிடம் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய இலக்கு என்று சொல்லும் பாலக் முச்சல்,
நான் செய்யும் ஒவ்வொரு இசைக்கச்சேரியும் ஏழைக்குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது என்று சொல்லி நெகிழ்கிறார். ஏழைக்குழந்தைகளுக்கு உதவும் இந்த பணியை செய்ய கடவுள் என்னை ஒரு கருவியாக தேர்ந்தெடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் பாலக் முச்சல்.