
சொந்த சின்னத்தில் போட்டியிடாததால் தமிழகத்தில் 42 கட்சிகள் அங்கீகாரத்தை இழந்துள்ள விவகாரத்தால் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் பலவும் வரும் தேர்தலில் சொந்த சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளன. இது சாத்தியமா? என்று பெரும் கட்சிகள் யோசிப்பதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் 6% வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதி அல்லது 2 சட்டமன்ற தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும், எந்த தொகுயிலும் வெற்றி பெறாவிட்டாலும் கூட 8% வாக்குகளையாவது அந்தக் கட்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியும். இல்லை என்றால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை ரத்து செய்துவிடும் தேர்தல் ஆணையம்.

அப்படித்தான் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 தேர்தல்களில் போட்டியிடவில்லை, செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பன போன்ற விதிகளை மீறியதால் இந்தியாவில் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதில் தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னனி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, தமிழர் முன்னேற்றக் கழகம், தொழிலாளர் கட்சி, உரிமை மீட்பு கழகம், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகி விவகாரம் தமிழகத்தில் பெரிய கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் சிறு கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

அங்கீகாரத்தை தக்க வேண்டும் என்றால் சொந்த சின்னத்தில் போட்டியிட்டாக வேண்டும். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பேச்சுவார்த்தை நடத்தி சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஆலோசித்து வருகின்றன.
இது பெரும் கட்சிகளுக்கு தலைவலியைக் கொடுத்திருக்கிறது. சொந்த சின்னத்தில் போட்டியிட சம்மதித்துவிட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பது ஒருபுறமிருக்க, கூட்டணி கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்து வெற்றிக்கணக்கை உயர்த்திக் காட்டுவதில் சிக்கல் ஏற்படுமே என்று தலையை சொறிந்து நிற்கின்றன.
சொந்த சின்னமா? வெற்றியா? என்று கூட்டணியில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது.