தேர்தல் ஆணையம் தன் பொறுப்பை வாக்களிக்கும் மக்களின் தலையில் கட்டியிருக்கும் வேலைக்குப் பெயர்தான் எஸ்.ஐ.ஆர். எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம். முந்தைய எஸ்.ஐ.ஆர். 2002 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்தபோது, வாக்காளர் யாரும் புதுப்பிக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுப்பதோ, அதில் அதற்கு முந்தைய எஸ்.ஐ.ஆரில் அவர்களின் வாக்கு எந்த பாகத்தில், எந்த வரிசை எண்ணில் இருந்தது என்பதையோ நிரப்பித் தர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காரணம், வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பவர்கள் வீடு வீடாக வந்து விவரங்களைக் கேட்டறிந்து, இறப்பு-நீக்கம்- புதிய வாக்காளர்-முகவரி மாற்றம் ஆகியவற்றைத் தங்களிடமிருந்த படிவங்களில் குறித்துக் கொண்டனர். வாக்காளரின் கடமை சரியான விவரங்களைத் தெரிவிப்பது மட்டும்தான்.
இந்த முறை பீகாரிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர், வாக்காளரையே கேள்வி கேட்கிறது. வாக்காளரையே கேள்விக்கான விடைகளைத் தேடச் சொல்கிறது. முந்தைய எஸ்.ஐ.ஆர். நடைபெற்றபோது எந்த வாக்குச்சாவடி என்பதை குறிப்பிடச் சொல்கிறது. ஆவணங்களை தருமாறு வலியுறுத்துகிறது. உண்மையைச் சொன்னால், இந்த விவரங்களை தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பி.எல்.ஓ எனும் பாக நிலை அலுவலர்களே அறிய மாட்டார்கள். தேர்தல் களத்தில் அனுபவமிக்க அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பாகநிலை முகவர்களான பி.எல்.ஏ.2க்களின் உதவியையே பி.எல்.ஓ.க்கள் நாடுகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு பாகத்திற்கும் பி.எல்.ஏ2க்களை நியமித்து, அந்த விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவார்கள். தேர்தல் ஆணையம் அதனை சரிபார்த்து, தன்னுடைய இணையதளப் பக்கத்தில் அவர்களின் பெயர்களைப் பதிவு செய்யும். அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பாக நிலை முகவர்கள் கிடையாது. முந்தைய தேர்தல்களில் அ.தி.மு.க.வின் பாகநிலை முகவர்கள் எல்லா பாகங்களிலும் நியமிக்கப்பட்டு தீவிரமாக பணியாற்றினார்கள். அண்மைக்காலமாக அவர்களின் எண்ணிக்கையும் வேகமும் குறைந்துவிட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, பா.ஜ.க. போன்ற கட்சிகள் அவற்றுக்கு செல்வாக்குள்ள பாகங்களில் முகவர்களை நியமித்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது.
1957 தேர்தலில் முதன் முதலில் களமிறங்கிய தி.மு.க.தான் இன்றைய நிலையில் முழுமையான அளவில் பாக நிலை முகவர்களை நியமித்திருக்கக்கூடிய தமிழக அரசியல் கட்சியாகும். தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 68ஆயிரம் பாகங்களிலும் அவர்கள் கட்சியின் பாக நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம் என ஊர் உலா வந்த போதும், த.வெ..க தலைவர் நடிகர் விஜய் கரூர் உயிர்ப்பலிகள் வரை வீக்எண்ட் டூர் போன போதும், தி.மு.க.வின் பாக நிலை முகவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்ற செயல்பாட்டின் கீழ், மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியுடன் ஒவ்வொரு பாகத்திலும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தார்கள். அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை, வரிசை எண், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்கள் அவர்களிடமிருந்த செயலியில் பதிவேற்றப்பட்டிருந்ததால், அவற்றை சரிபார்தது, அந்த வாக்காளர்களிடம் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை எடுத்துச் சொல்லி, அவை வாக்காளர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கேட்டறிந்து ஆதரவு திரட்டினார்கள். தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஓ.க்களிடம் கூட இத்தகைய விவரமோ, செயலி வசதியோ கிடையாது.
தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பாகவாரியாக தன் கட்சியை ஆன்லைன் மயப்படுத்தியிருப்பதால் தி.மு.க.வினர் எளிதாக விவரங்களைக் கண்டறிந்து, எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவதற்கு வாக்காளர்களுக்கு உதவி செய்கிறார்கள். பி.எல்.ஓக்களும் அவர்களின் உதவியை நாடுகிறார்கள். இதுதான் உண்மையான களநிலவரம். இதனை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் போன்றவர்கள் வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எஸ்.ஐ.ஆர் வேண்டும் என வழக்குப் போட்டுவிட்டு, இப்போது எஸ்.ஐ.ஆர். படிவங்கள் சரியாக வருவதில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். த.வெ.க தலைவரும் அவருடைய ரசிகர்களும் எஸ்.ஐ.ஆர். பற்றியோ, தேர்தல் ஆணைய நடைமுறைகள் பற்றியோ, பி.எல்..ஏ.2 பற்றியோ எதுவும் தெரியாமல், தங்கள் வாக்குகளை பறிப்பதற்காக மு.க.ஸ்டாலின்தான் எஸ்.ஐ.ஆரைக் கொண்டு வந்து பழிவாங்குகிறார் என உளறுகிறார்கள்.
ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும். அதனை சரியாக செய்வதற்கான செயல்திட்டமாக இருக்கவேண்டிய எஸ்.ஐ.ஆர் அவசர கோலத்தில் நிறைவேற்றப்படுவதால்தான் இத்தனை கோளாறுகளும். கோபப்படவேண்டியது தேர்தல் ஆணையத்தின் மீதும் அதனைக் கைப்பாவையாக்கியுள்ள பா.ஜ.க மீதும்தான்.
