தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் எனப்படும் தேர்தல் ஆணையத்தின் (Election Commission) வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், 2வது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. அந்த வகையில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காளத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டது.இதில், 58 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் எனப்படும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டு டிசம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் 100 சதவீத எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திரும்பப்பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று எஸ்.ஐ.ஆர்க்கு பிறகு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனித்தனியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் (District Collector) அலுவலகங்களில்வரைவு வாக்காளர் பட்டியல்அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரைவு வாக்களர் பட்டியலில் இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் போன்றவை நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரைவு வாக்காளர் திருத்த பணிக்கு முன் 6,41,14,587 பேர் இருந்துள்ளனர் என்றும் வரைவு வாக்காளர் திருத்த பணிக்கு பின் 97,37,832 பேரை நீக்கி 5,43,76,755 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது,
நீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரம்:
- இறந்த வாக்காளர்கள் – 26,94,672
- முகவரியில் இல்லாதவர்கள் – 66,44,881
- இரட்டை பதிவுகள் – 3,39,278
- மொத்தம் நீக்கப்பட்டோர் – 97,37,832
நீக்கம் செய்யப்பட்ட பிறகு இருக்கும் மக்களின் எண்ணிக்கை:
- பெண்கள் – 2,77,06,332
- ஆண்கள் -2,66,63,233
- மாற்றுத்திறனாளி – 4,19,355
- மூன்றாம் பாலினம் – 7,191
- தற்பொழுதைய வாக்காளர்கள் -5,43,76,755
எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் நீக்கம்?
| மாவட்டம் | எண்ணிக்கை | சதவீதம் (%) |
|---|---|---|
| அரியலூர் | 24,368 | -4.6 |
| ஈரோடு | 3,25,429 | 16.3 |
| திருப்பூர் | 5,63,785 | 23.1 |
| கோவை | 6,50,590 | 20.1 |
| கன்னியாகுமரி | 1,53,373 | 9.6 |
| சிவகங்கை | 1,50,828 | 12.2 |
| விருதுநகர் | 1,89,964 | 11.6 |
| பெரம்பலூர் | 49,548 | 9.1 |
| தூத்துக்குடி | 1,62,527 | 10.9 |
| கடலூர் | 2,46,818 | 11.3 |
| நாகப்பட்டினம் | 57,338 | 10.0 |
| திருச்சி | 3,31,787 | 14.0 |
| தஞ்சாவூர் | 2,06,503 | 9.8 |
| மதுரை | 3,80,474 | 13.9 |
| நாமக்கல் | 1,93,706 | 13.2 |
| நெல்லை | 2,14,957 | 15.1 |
| தருமபுரி | 81,515 | 6.3 |
| விழுப்புரம் | 1,82,865 | 10.5 |
| ராமநாதபுரம் | 1,17,364 | 9.7 |
| திண்டுக்கல் | 3,24,894 | 16.8 |
| கிருஷ்ணகிரி | 1,74,549 | 10.3 |
| தென்காசி | 1,51,902 | 10.8 |
| சென்னை | 14,25,018 | 35.5 |
| தேனி | 1,25,739 | 11.1 |
| திருவாரூர் | 1,29,480 | 12.0 |
| சேலம் | 3,62,429 | 11.9 |
| திருப்பத்தூர் | 1,16,739 | 11.6 |
| செங்கல்பட்டு | 7,01,871 | 25.2 |
| நீலகிரி | 56,091 | 9.5 |
| கரூர் | 79,690 | 8.8 |
| திருவண்ணாமலை | 2,51,162 | 11.8 |
| காஞ்சிபுரம் | 2,74,274 | 19.6 |
| மயிலாடுதுறை | 75,378 | 9.6 |
| ராணிப்பேட்டை | 1,45,157 | 13.7 |
| புதுக்கோட்டை | 1,39,587 | 10.1 |
| திருவள்ளூர் | 6,19,777 | 17.3 |
| கள்ளக்குறிச்சி | 84,329 | 7.3 |
| வேலூர் | 2,15,025 | 16.5 |
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூடுதலாக, அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த முகாம்களில் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
