2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலுக்கான தீவிர சிறப்புத் திருத்தம் நடந்து முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகியவற்றிலும் மேலும் பல மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமக்களாக உள்ளவர்களுக்குத்தான் வாக்குரிமை அளிக்க முடியும் என்பதால், மற்ற நாடுகளிலிருந்து இங்கு வந்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கக்கூடாது என்பதற்காக, குறிப்பாக பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்களுக்கு வாக்குரிமை இருக்கக்கூடாது என்பதால் பீஹார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்த தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டுடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் அசாம் மாநிலத்தின் மிகப் பெரிய பிரச்சினையே வெளிநாட்டவர்கள் குடியேற்றம்தான். அந்த மாநிலத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான செயல்.
தமிழ்நாட்டில் (Tamilnadu) கடந்த நவம்பர் 4ஆம் நாள் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடங்கப்பட்டது. ஒரு மாதம் மட்டுமே இந்தத் திருத்தம் நடைபெறும் என அறிவித்ததிலேயே பல குளறுபடிகள் தொடங்கிவிட்டன. இந்தத் திருத்தப் பணியை மேற்கொண்ட ஊழியர்களுக்கு அது குறித்த தெளிவு இல்லை. அவர்களுக்குப் போதிய பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அங்கன்வாடியிலும், நகராட்சி, மாநகராட்சிகளிலும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பணிகளில் இருந்தவர்களை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு நியமித்ததால், அவர்களின் வழக்கமான பணி பாதிக்கப்பட்டது. திருத்தப் பணியும் முறையாக நடைபெறவில்லை. அத்துடன், வடகிழக்கு பருவமழை கடுமையாக இருந்தது. அதனால் ஒரே மாதத்தில் முடித்தே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்த தேர்தல் ஆணையம் அதன் பிறகு இரண்டு வாரங்கள் தனது பணியை நீடித்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (SIR) நிறைவடைந்து, டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வாக்களார் பட்டியல் திருத்தத்திற்கு முன்பு 6,41,14,587 வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள். திருத்தத்திற்குப் பிறகு, 5,43,06,332 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் வழக்கம்போல பெண்கள்தான் அதிகம். ஏறத்தாழ 97.38 இலட்சம்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீஹாரில் 56 இலட்சம் வாக்காளர்கள்தான் நீக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அதைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தீவிரத் திருத்தப் பணியை இன்னும் சரியாக செய்திருந்தால் ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். இதன் மூலம், தீவிரத் திருத்தப் பணி என்பது சரியான முறையில் இல்லாமல், அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது. இதைத்தான் தி.மு.க, அதன் தோழமைக் கட்சிகள், மற்ற கட்சிகள் ஆரம்பத்திலிருந்து சொல்லி வந்தன. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் மட்டுமே எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவு தெரிவித்தன. அதிலும், தி.மு.க எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க. தரப்பில் எஸ்.ஐ.ஆர்.வேண்டும் என கோர்ட்டில் வழக்குப் போட்டு ஆச்சரியப்படுத்தினர்.
தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், தகுதி இருந்தும் பெயரை இல்லாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் வரும் ஜனவரி 18ஆம் தேதிக்குள் படிவம் 6 அல்லது படிவம் 8 ஆகியவற்றை நிரப்பி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெயரை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியாகும் இறுதிப் பட்டியலில் பெயர் இடம்பெற்றால்தான் உண்டு. இடம்பெறாவிட்டால் வாக்களிக்க முடியாது.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இணையதளம் வாயிலாக தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் கொடுத்து, அவரவர் வாக்குரிமை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்காளர் பட்டியல் அந்தந்த பூத் வாரியாக வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பாக முகவர்களிடம் இந்தப் பட்டியல் இருக்கும். அவர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். வாக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
வழக்கமாக 50% மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை மாவட்ட தொகுதிகள் ஒவ்வொன்றிலும் சராசரியாக ஒரு இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பதிவாகும் வாக்குகளை வைத்து பார்க்கும்போது இதில் பதற்றம் ஏற்பட எதுவும் இல்லை. சொந்த ஊரிலும் ஓட்டு, சென்னையிலும் ஓட்டு என்று வாழ்பவர்கள் அதிகம். அவர்களின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின்படி ஏதேனும் ஓரிடத்தில்தான் பெயர் இடம்பெறும். குடியிருப்பு மாறிய பலரது வாக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
ஆனால், இறந்தவர்களின் வாக்குகள் சென்னை (chennai) தொகுதிகளில் பெரும்பாலும் அப்படியே உள்ளன. தேர்தல் ஆணையம் அவசரமாக இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை செய்ததற்கு இதுவே சான்று. நாம்தான் நம் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்.
