தப்பியோடியபோது சுட்டு பிடிக்கப்பட்ட தமிழகத்தில் ஏ பிளஸ் ரவுடி சத்யா கொடுத்துள்ள வாக்குமூலம் , அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், நடைபயிற்சி சென்றபோது கடத்தி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இத்தனை ஆண்டுகளாகியும் இந்த வழக்கு இன்னமும் நிறைவடையாமல் உள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் சத்யா. ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு வந்தவர் குடவாசல் ராஜேந்திரன். ராமஜெயம் கொலைக்கு முன்பாக ராஜேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் 12 ரவுடிகள் சந்தித்து பேசியுள்ளார்கள். அதில் ஒருவர்தான் சத்யா. அந்த வகையில்தான் சத்யா உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
தமிழகத்தின் ஏ பிளஸ் ரவுடிகளில் முக்கியமானவர் சத்யா(45), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர். இவர் மீது தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை என 32 வழக்குகள் உள்ளன. சிதம்பரத்தில் கல்யாண மண்டபத்தில் மணமகன் – மணமகள் இருவரையும் வெட்டிச்சாய்த்தவன் சத்யா. ரவுடி டெலிபோன் ரவியை 2005ல் வெட்டிக்கொலை கொலை செய்த வழக்கு, மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், தமிழகம் முழுவதும் 6 கொலை வழக்குகள் உள்ளன. தவிர, கொள்ளை வழக்குகளிலும் தொடர்புடைய சத்யா, தமிழகத்தின் ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலில் உள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டில் பாஜக வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் அலெக்சிஸ் சுதாகர் மூலமாக பாஜகவில் இணைந்த சத்யா, சமீப காலமாக சென்னையில் வசித்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, கொலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளார். பாஜக பிரமுகர்கள் அமர்பிரசாத் ரெட்டி, நயினார் நாகேந்திரன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் சத்யாவுக்கு நெருக்கமான இருந்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகே இலந்தோப்பு தனியார் விடுதியில் நடந்த அலெக்ஸ்ஸில் சுதாகர் பிறந்த நாள் விழாவில் நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்ட ரவுடிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது ஏ பிளஸ் ரவுடிகளுக்கும் சின்ன ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது தெரியவந்ததும், தேடப்படும் ரவுடிகள் இருந்தால் கைது செய்யலாம் என்று நினைத்த போலீசார் சம்பவ இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கூட்டாளிகளுடன் காரில் சென்ற சத்யாவை பார்த்துவிட்டனர்.
பழவேலி மலைப்பகுதியை நோக்கி தப்பி ஓடிய சத்யா மீது போலீசார் சுட்டதில் இடது காலில் பலத்த காயத்துடன் போலீசில் சிக்கினார். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சத்யா கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வந்தவுடன் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் குழு, சென்னைக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்யாவிடம் வாக்கு மூலம் பெற்றிருக்கிறது.
தனக்கும் பாஜக பிரமுகர்களுக்கும் இருக்கும் நெருக்கம் பற்றியும், ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு வந்த குடவாசல் ராஜேந்திரன் குறித்தும், அவருக்கு நெருக்கமான ரவுடிகள் குறித்தும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். குடவாசல் ராஜேந்திரன் உடலநலக்குறைவால் உயிரிழந்து விட்டதால் அவருடன் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் பாஜக பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.