முப்பது வருடத்திற்கு முன்பு இறந்த மகளுக்கு திருமணம் செய்து வைத்து வைத்துள்ள நிகழ்வு கர்நாடகாவில் நிகழ்ந்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்த மகளுக்கு தாய் பூப்புனித நீராட்டு விழா நடத்திய சிவகங்கை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. நெகிழ வைக்கும் இந்த உறவுகள் குறித்து வைலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் – ராக்கு தம்பதியில் ஒரே மகள் பாண்டிச்செல்வி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவினால் பாண்டிச்செல்வி உயிரிழந்துவிட்டார். அன்று முதல் தன் மகளின் பிரிவில் இருந்து மீள முடியாமல் உள்ளார் ராக்கு.
அலங்காரம் செய்துகொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த பாண்டிச்செல்வி திருமணம் மற்றும் பூப்புனித விழாக்களுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். 8 வயதில் இறந்த மகள் இன்று இருந்தால் 11 வயது ஆகி இருக்கும். பூப்பெய்திருப்பாள் என்று நினைத்த ராக்கு, தன் மகளின் பூப்புனித நீராட்டு விழா நடத்தி முடித்திருக்கிறார்.
உற்றார் உறவினர்களுக்கு எல்லாம் சொல்லி மண்பத்தில் விருந்து வைத்து இந்த விழாவ நடத்தி இருக்கிறார். பாண்டிச்செல்வியின் கட் அவுட் வைத்து அவருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து, உறவுகள் கொண்டு வந்திருந்த பூ, பழங்கள், சுவீட் ஆகியவற்றையும் வைத்து படைத்துள்ளார்.
வந்திருந்த உறவினர்கள் பாண்டிச்செல்வி கட் அவுட் அருகே நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விருந்து சாப்பிட்டு மொய் எழுதியும் சென்றிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். தங்கள் வீட்டில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இறந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். அதாவது திருமணம் ஆகாமல் இறந்த பெண்ணின் ஜாதகம் மற்றும் சாதி, குலம் ஆகியவை திருமணம் ஆகாமல் இறந்த ஆணின் ஜாதகம் மற்றும் சாதி, குலம் ஆகியவற்றோரு ஒத்துப்போனால் இருவரின் படங்களை வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கம்.
ஆசை நிறைவேறாமல் ஆவியாய் அலையும் ஆத்மாக்கள் சாந்தியடைய இவ்வாறு திருமணம் செய்து வைக்கிறார்கள் துளு மக்கள். இந்த திருமணத்திற்கு பேய் திருமணம், பிரேத திருமணம் என்று சொல்கிறார்கள்.
தட்சின கன்னடா மாவட்டம் புத்தூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிறுமிக்கு தற்போது திருமணம் செய்து வைத்துள்ளனர் உறவினர்கள். வரன் வேண்டும் என்று விபரத்துடன் பேப்பரில் விளம்பரம் செய்ய, அதே போன்று வரன் தேடிக்கொண்டிருந்த மணமகன் வீட்டார் சம்பந்தம் பேசி, நிச்சயதார்த்தம் நடத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மாங்கல்யம், பட்டு வேட்டி சட்டை, பட்டுப்புடவை எடுத்து, உறவினர்களுக்கு விருந்து வைத்து நடந்துள்ளது இந்த வினோத திருமணம்.