இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) விஞ்ஞானிகள் உட்பட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, ராஜ நாகம் உட்பட அதிக நச்சுத் தன்மை உடைய எலாபிடே(Elapidae) குடும்பத்தின் பாம்புகளால் வெளியிடப்படும் நியூரோடாக்சின் நச்சை எதிர்த்துப் போராடுவதற்கு, செயற்கை மனித ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளனர்.
எலாபிடே(Elapidae) என்பது கொடிய விஷ பாம்புகளின் குடும்பமாகும், இந்த வகை பாம்புகளிடம் மிகவும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த விஷம் இருப்பதாக அறியப்படுகிறது.
பொதுவாக வாயின் முன்புறத்தில் குறுகிய, நிலையான கோரைப் பற்களால் இந்த பாம்புகள் வகைப்படுத்தப்படுகிறது. நாகப்பாம்பு, ராஜ நாகம், கிரைட் மற்றும் கருப்பு மாம்பா ஆகிய பாம்புகள்இந்த குடும்பத்தில் அடங்கும்.
HIV மற்றும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்க செயற்கை மனித ஆன்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டது போல், அதே அணுகுமுறையை விஞ்ஞானிகள் குழு இதற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தப் புதிய முயற்சி பல்வேறு வகையான பாம்புகளின் விஷத்திற்கு எதிராக உலகளாவிய தீர்வை உருவாக்குவதற்கு உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
பாம்புக்கடி சிகிச்சைக்கான செயற்கை ஆன்டிபாடிகளை உருவாக்கும் உத்தியை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை, என கூறப்படுகிறது.
Science Translational Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், Elapidae பாம்புகளுக்கு எதிராக விஞ்ஞானிகள் உருவாக்கிய ஆன்டிபாடிகளை, எலிகளுக்கு சோதனை செய்ததில் குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த ஆன்டிபாடி, எலாபிட் விஷத்தில் 3FTx எனப்படும் முக்கிய நச்சுப்பொருளை குறிவைத்து அழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பாம்பு விஷக் கடியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவது பெரிய கவலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.