மோடி அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், விஸ்வகர்மா என்கின்ற வார்த்தையின் மீது அதற்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்றும் திமுக ஆட்சி மீது பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
விஸ்வகர்மா திட்டத்திற்கு எழுபது ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரு திட்டத்தை அன்றைய முதலமைச்சர் ராஜாஜி கொண்டு வந்தார். அதுதான் குலக்கல்வி திட்டம். அதை பெரியார் எதிர்த்தார். பெரியாரிடம் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து இருந்த அண்ணாவும் எதிர்த்தார். 1953 ஆம் ஆண்டு திமுக நடத்திய மும்மனைப் போராட்டத்தில் ஒரு முனை போராட்டம் என்பது ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து தான். குலக்கல்வித் திட்டம் என்பது பள்ளிகளில் பகுதி நேரம் பாடங்களைப் படித்து விட்டு, மீதி நேரம் அவரவர் குலம் சார்ந்த தொழிலை செய்ய வேண்டும் என்பதுதான். இது வர்ணாசிரம அடிப்படையிலான கல்வி முறை என்பதால் சமூக நீதி யை வலியுறுத்திய திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் இதை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தின. அதன் விளைவாக ராஜாஜி பதவி இழக்க நேரிட்டது முதலமைச்சராக காமராஜர் 1954ல் பொறுப்பேற்றார். அன்றைய குலக்கல்வி திட்டத்திற்கு இணையானது இன்றைய விஸ்வகர்மா திட்டம் என்று திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதனை இப்போதும் எதிர்க்கிறது.
விஸ்வகர்மா என்பது ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பதால் அவர்களை எதிர்ப்பதாக பாஜக அரசியல் செய்ய முயன்றாலும், திமுக தரப்பில் விஸ்வகர்மா சமூகத்திற்கான பல நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக சமூகநீதிக்கு ஆதரவாண இயக்கமே தவிர எந்த சமூகத்திற்கும் எதிரான இயக்கம் அல்ல என்றும் அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் விஸ்வகர்மா திட்டத்தை திமுக அரசு கடைபிடிக்க மறுக்கிறது என்பதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்து இருக்கிறார். இது குறித்து அவர் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். விஸ்வகர்மா திட்டத்தில் தமிழ்நாடு அரசு சில மாற்றங்களை செய்ய விரும்புகிறது என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் பரிந்துரைத்திருக்கிறார். அந்த பரிந்துரைகள் குறித்து திமுகவின் நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் கனிமொழி சோமு விரிவாக பதிவிட்டுள்ளார்.
- கட்டாயமாக பாரம்பரிய குடும்பத் தொழிலாக குறிப்பிட்ட தொழிலை கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு தகுதி படைத்தோர் தங்களுக்கு விருப்பமான தொழில்களை மேற்கொள்ள வழிவகை செய்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் ரீதியான சமூக அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.
- குறைந்தபட்ச வயது வரம்பு 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும். இதன்மூலம் தன் சுய விருப்பத்தோடு குடும்பத்தொழிலை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று பரிந்துரைத்து உள்ளனர். இந்த நிபந்தனை மூலம் படிக்கும் வயதிலேயே தொழில் நோக்கி நகர்த்திவிட்டு கல்வி உரிமையை பறிக்க விரும்பும் சதித்திட்டம் நமது தமிழ்நாடு அரசால் தகர்க்கப்படுகிறது.
- பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாக ஆவணங்கள் சரிபார்த்தல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பதிலாக கிராம நிர்வாக அலுவலர்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாயத்து அளவிலான அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலோ அல்லது சாதிய ரீதியிலான அழுத்தமோ பயனாளிகள் மீது மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க முடியும். மேலும் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்ளாக ஆவணப்படுத்தப்படுதல் நடக்கும்போது தகவல்கள் சரிபார்ப்பதும் எளிமையாக்கப்படும்.
ஜனவரி 4, 2024 அன்றே தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்தப் பரிந்துரைகளை சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் அளித்திருந்தார். ஆனால் 15 மார்ச், 2024 அன்று ஒன்றிய அமைச்சகத்தால் வழங்கப்பட்டிருந்த பதில் அறிக்கையில் இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாமலும், எந்தவிதமான மாற்றங்கள் இல்லாமலும் வெளிவந்துள்ளது. எனவே சாதிய அடிப்படையில் வேறுபாடு பாராட்டாது, தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு தனி நபரது தேவைகளை பொறுத்தே அவர்களுடைய பொருளாதாரம் சார்ந்த முடிவுகள் எடுப்பதை உறுதி செய்தல் வேண்டும் என்றும், அதுவரை இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது என்றும், தான் நெஞ்சில் கொண்டுள்ள சுயமரியாதை சித்தாந்தத்தின் வழி பதில் அளித்துள்ளார் தமிழக முதல்வர்.
செருப்பு தைப்பவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் புதிய வகை செருப்புகளை விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தைக்க வேண்டும், பானை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் புதுப்புது பானைகளை இந்த திட்டத்தின் கீழ் செய்ய வேண்டும், அணிகலன்கள் செய்பவர்கள் தங்கள் பிள்ளைகளையும் இந்த தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பது ராஜாஜி காலத்தின் குலக்கல்வி முறைக்கு இணையானது. அதனால் தான் சமூக நீதியை வலியுறுத்தி, அதன் அடிப்படையில் கல்வி,வேலை வாய்ப்புகளை நீதிக்கட்சி ஆட்சி காலம் தொடங்கி காமராஜர் ஆட்சி காலத்திலும் பின்னர் வந்த திராவிட கட்சிகள் ஆட்சி காலத்திலும் பின்பற்றிய தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு வெளிப்படுகிறது.
தமிழ்நாட்டின் மனநிலையை மத்திய பாஜக அரசு இன்றுவரை உணரவும் இல்லை, மதிக்கவும் இல்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் அங்கமாக பாஜக கருதவில்லையோ என்று தோன்றுகிறது. தமிழ்நாடு அரசு தன்னுடைய மாணவர்களுக்கு நான் முதல் வந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகின்ற நிலையில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் என்பது மாணவர்களை காலத்தால் பின்னோக்கி இழுக்கின்ற செயலாகவே அமைகிறது. தமிழ்நாட்டில் வளர்ந்துள்ள கல்வி முறையையும் கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பரிந்துரைகளை பரிசீலித்து உரிய திருத்தங்களை செய்ய வேண்டியது மத்திய பாஜக அரசின் கடமை.