அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி ஆணை வழங்கப்பட்ட மூன்றாம் ஆண்டு நிறைவுநாள் இன்று . முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் நூறாவது நாளில் இந்த சாதனையை செய்தார்.
சமூக மாற்றமும் சமதர்மமும் சாதிகளை ஒழித்தால்தான் நிகழும் என்று கருதி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியார், சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கோயில் கருவறைகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று குரல் எழுப்பினார். தன் வாழ்நாள் முழுவதும் ‘கடவுள் இல்லை’ என்று பரப்புரை செய்தாலும், சாதி ஒழிப்பு தளத்தில் இருந்து கோவில் நுழைவுப்போராட்டங்களும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான போராட்டங்களும் நடத்தினார்.
அவர் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் மறைந்துவிட்டதால், ‘’இது பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்’’ என்று குறிப்பிட்ட முத்தமிழறிஞர் கலைஞர், 1970 தொடங்கி தன் ஆயுளின் இறுதி வரை இதற்காகப் போராடிக்கொண்டே இருந்தார். திராவிட இயக்கத்தின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து நிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 14.8.2021ல் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றினார்.
ஈராயிரம் ஆண்டு கருவறைத் தீண்டாமை இருள் அகற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 24 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை கோயில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்தார். அந்த அர்ச்சகர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., ஆரிய சக்திகள் நெருக்கடிகள் கொடுத்த போதிலும் பிராமணர்கள் அல்லாத 24 அர்ச்சகர்களும் தொடர்ந்து சிறப்பான முறையில் கோயில்களில் பூஜைகள் செய்து, குடமுழுக்கு நடத்தி மக்களிடையே அங்கீகாரத்தை பெற்றனர்.
ஆனாலும், ஆகமக்கோயில் பிராமணர்களுக்கு, ஆகமம் அல்லாத கோயில்கள் மட்டுமே சூத்திர, பஞ்சமருக்கு என்ற எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டே செல்கின்றன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை தொடர்ந்து எதிர்த்து வரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்து முன்னணியினர் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்ய தடை பெற்றுள்ளார்கள். கடந்த ஓராண்டாட அந்தத் தடை நீடிக்கிறது.
அர்ச்சகர் நியமனத்திற்கான ஆகமங்களில் சாதி ஒரு தடையாக இருக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அர்ச்சகர் நியமன நடவடிக்கையில் முன்னேற்றமில்லாதது ஒருபுறமிருக்க, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் பழனி முருகன்கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் போன்றவற்றில் தேவர், வன்னியர், செட்டியார், பிள்ளை, ஆதி திராவிடர், கவுண்டர் உள்ளிட்டோர் கருவறையில் நுழைய முடியாத வேதனையும் இருக்கிறது.
என்னதான் ஆரிய சக்திகள் திரண்டு நின்றாலும், தமிழ் மக்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட கோயில்களில் தமிழையும் தமிழர்களையும் நிலைபெறச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும் நிலையில், கோயில்களில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து சாதி இந்துக்கள் அர்ச்சகர் நியமனத்திற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்த வண்ணம் உள்ளன.