பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் சுதந்திர இந்தியாவின் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள், நவம்பர் 26, 1949. அதனடிப்படையில், இந்தியா குடியரசான நாள், ஜனவரி 26, 1950. அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75ஆம் ஆண்டில் நவம்பர் 26 என்பது மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருப்பதை உறுதி செய்து, நவம்பர் 25ல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுதான்.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அது பின்வருமாறு அமைந்துள்ளது. இந்திய மக்களாகிய நாம், உறுதிகொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி எண்ணம் கருத்து பக்தி நம்பிக்கை மற்றும் வழிபாடு சார்ந்த தன்செயலுரிமை, படிநிலை மற்றும் சமத்துவ வாய்ப்பு ஆகிய உறுதி செய்திட, தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்திட அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட, இந்த 1949 நவம்பர் 26ஆம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்குத் தருகிறோம். -இதுதான் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரை.
மக்களால், மக்களுக்காக, மக்களுடைய என்கிற குடியாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்திய மக்களாகிய நாமே நமக்கான சட்டத்தை, சமத்துவ நோக்கத்தில் நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை முகப்புரை வலியுறுத்துகிறது. இந்த முகப்புரையில் சமூகத்துவ (சோஷலிச), மதச்சார்பற்ற (secular) ஆகிய இரு சொற்களும் 1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக்காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட 42வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டது. இதனை மதவாத அரசியல் சக்திகள் எதிர்ப்பதுடன், அந்த சொற்களை எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்று வரிந்து கட்டி நிற்கின்றன.
இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக இருப்பது போல, இந்தியா என்பது இந்து நாடாக இருக்கவேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மற்றும் அதன் ஆதரவு சக்திகளின் திட்டம். ஆனால், இந்திய சுதந்திரத்தின்போதே காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்பு என்பதால் இங்கே பின்பற்றப்படும் அனைத்து மதம் சார்ந்தவர்களுக்குமான நாடு என்பதில் உறுதியாக இருந்தனர். அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரும் இதனை இந்து நாடு என்று சொல்லவில்லை. அவர், நான் இந்துவாக பிறந்தேன். ஒருபோதம் இந்துவாக சாகமாட்டேன் என்று சொல்லி, தன் வாழ்வின் இறுதிப்பகுதியில் 6 லட்சம் மக்களுடன் புத்த மதத்தை தழுவினார்.
இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில், கடவுளின் பெயரால் In the name of God என்று தொடங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டபோது, அதனைத் தவிர்த்து, ‘இந்திய மக்களாகிய நாம்’ We the people of India என்றே உருவாக்கியது டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு. ஆனால், கடவுளின் பெயரால் கலகத்தை உண்டாக்கி, மதவெறி அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் தாங்கள்தான் தேசப்பற்று கொண்டவர்கள் என்பதுபோல போலி வேடமிட்டு, அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தின் முகப்புரையில் திருத்தம் செய்து சேர்க்கப்பட்ட ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என முயற்சித்தனர். அதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட மூவர், இந்த வார்த்தையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
கடந்த அக்டோபர் 21 அன்று வழக்கு விசாரணை நடந்தபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இந்த அமர்வின் நீதிபதியான கண்ணா, “அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை என்பது மதச்சார்பின்மைதான். உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மதச்சார்பின்மையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன. சோஷலிசம் என்பதும் அனைத்து மக்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் சமமான முறையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுதான்” என்ற விளக்கத்தை அளித்திருந்தார். இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு சுப்பிரமணியசாமி உள்ளிட்ட மூவரின் மனுவைத் தள்ளுபடி செய்து, மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளது.
வலதுசாரி இடதுசாரி என்று எந்த கொள்கையை கொண்டவர்களாக இருந்தாலும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்பது பொருளாதாரத்தில் அனைவருக்கும் ஆன சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்றும், மதச்சார்பின்மை என்பது அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துகின்ற அவர்கள் உரிமையை மதிக்கின்ற தன்மையை காட்டுகிறது என்றும் கூறியுள்ள உச்சநீதிமன்றம், “திருத்தம் மேற்கொண்டு பல ஆண்டுகள் ஆனநிலையில் இப்போது ஏன் பிரச்சினையைக் கிளப்புகிறீர்கள்” என்று கேட்டு, இரு சொற்களும் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைத் தன்மைகள் என்பதை உறுதி செய்துள்ளது.
பல மொழிகள், பல இனங்கள், பலவகைப் பண்பாடு கொண்ட இந்திய ஒன்றியத்தை ஒரே மொழி-ஒரே மதம்-ஒரே நாடு என்ற பெயரில் மதவாத நாடாக ஆக்க முயற்சிக்கும் மதவெறி சக்திகளின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறது நீதியின் சுத்தியல்.