எதேச்சையாக பொது இடத்தில் எஸ்.பி.வேலுமணியும் நயினார் நாகேந்திரனும் சந்தித்துப் பேசியிருந்தால் ‘’மீண்டும் அதிமுக – பாஜக உறவு மலர்கிறதா?’’ என்ற கேள்வி எழுந்திருக்காது. நயினாரின் வீடு தேடிச்சென்று சந்தித்து பேசியிருக்கிறார் வேலுமணி. அதனால்தான் மீண்டும் உறவா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவரைத்தவிர கட்சியின் நிர்வாகிகள் யாரும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நேரடியாக அழுத்தமாக சொல்லவே இல்லை.
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கும், அதை தலைமைதான் முடிவு செய்யும் என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். அதே நேரம், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரவேண்டும். அதன்பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அதிமுகவின் சீனியர்கள் பலரும் விரும்புவதாக தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக எஸ்.பி.வேலுமணி பாஜக கூட்டணியை விரும்புவதாகவும், அதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றால் அவரையே ஒரங்கட்டிவிட்டு அதிமுக கூட்டணியில் பாஜகவை கொண்டு வந்துவிட வேண்டும் என்று உறுதியாக இருப்பதாகவும், அது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைக்கூட்டங்களை அவர் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
வேலுமணியைப்போல் பாஜகவில் உள்ள பலரும் அதிமுக -பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது.
இரு கட்சியில் உள்ள சில கூட்டணியை விரும்பினாலும் எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை. அவர்களின் பேச்சு அதைத்தான் காட்டுகிறது.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், கட்சிகள் கூட்டணி தொடர்பான நடவடிக்கைகளில் மும்முரமாக உள்ளன. 2024 நாடாளுமன்ற தேர்தலைப்போலவே 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று இப்போதும் அடித்துச் சொல்கிறார் எடப்பாடி. இந்த நிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் – எஸ்.பி.வேலுமணி சந்திப்பு நடந்திருக்கிறது.
கட்சிக்குள் தனக்கு அதிருப்தி இல்லை என்பதை நிரூபிப்பதற்காகத்தான் அதிமுக கள ஆய்வுக்கூட்டங்களை நடத்தச்சொல்லி இருக்கிறார் எடப்பாடி. அவரின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டார்கள். களேபரத்தில்தான் முடிகிறது கள ஆய்வுக்கூட்டங்கள்.
நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் தமிழ்நாடு பாஜக துணைத்தலைவரும், சட்டமன்ற பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து பேசியிருக்கிறார் வேலுமணி. இந்த சந்திப்பின் போது அதிமுக மாஜி அமைச்சர் சண்முகநாதன், நெல்லை அதிமுக கணேஷ்ராஜா, அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, நயினாரின் மகன் பாலாஜி, மேலும் சில அதிமுகவினர் இருந்துள்ளனர்.
சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்த வேலுமணியும் நயினாரும் உடன் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு 20 நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள்.
வேலுமணி தன் இல்ல திருமண விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என்று இந்த சந்திப்பு குறித்து கூறியிருக்கிறார் நயினார்.
20 நிமிடங்களுக்கு மேல் தனியாக பேசி இருக்கும் நிலையில், 5 நிமிடங்கள்தான் இருவரும் பேசினர். ஆனால், எல்லோரும் உடன் இருந்தோம். தனிப்பட்ட முறையில் இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. அந்த பழக்கத்தில்தான் எங்கள் வீட்டிற்கு வந்தார் வேலுமணி. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்கிறார் நயினாரின் மகன் பாலாஜி.
எல்லோர் முன்னிலையும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டாலும் அந்த தனியறை சந்திப்பில் நடந்தது என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தனியறையில் 20 நிமிடங்கள் பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததா? இல்லை, எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றப்போகிறார் வேலுமணி என்று உலவும் செய்தியை உண்மையாக்கும்படி ஆலோசனை நடந்ததா? என்று பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது இந்த சந்திப்பு.