நேற்றிரவு(30/12/2024) சரியாக 10 மணிக்கு PSLV-C60 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. SpaDeX என்றழைக்கப்படும் இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே Space Docking எனப்படும் இரண்டு விண்கலன்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், இஸ்ரோவின் SpaDeX திட்டம் மூலம், இரண்டு தனித்தனி சுதந்திரமாக பறக்கும் விண்கலன்களை இணைக்கும் (Space Docking Experiment – SpaDex) பணியை மேற்கொள்ளப்பட உள்ளது.
நேற்று இரு விண்கலன்களை சுமந்து சென்ற PSLV-C60 ராக்கெட், அவகளை வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் SpaDex விண்கலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்து, தோராயமாக வரும் ஜனவரி 7-ம் தேதி இணையும் பணியை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இந்த ஸ்பேஸ் டாக்கிங் (SpaDex) திட்டம் வெற்றியடைந்தால், சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனிதர்களை அனுப்புவது முதல் இந்தியாவுக்கு விண்வெளியில் தனி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் திட்டம் வரை பலவற்றிக்கு அடித்தளமாக அமையும்.
#BREAKING | இஸ்ரோவின் PSLV C-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
— Spark Media (@SparkMedia_TN) December 30, 2024
இரண்டு செயற்கை கோள்களை 470 கிலோ மீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது இஸ்ரோ#SparkMedia #Isro #PSLVC60 #India pic.twitter.com/tziW8Wo6uh
‘ஸ்பேஸ் டாக்கிங்’ என்றால் என்ன?
விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு முறையும், குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்பவர்கள், தாங்கள் பயணிக்கும் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்க (Docking) வேண்டும்.
அப்படி செய்ததும், இரண்டும் பாதுகாப்பாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பின்னரே, விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்குள் செல்ல முடியும்.
விண்வெளியில் டாக்கிங் என்பது மிகவும் கடினமான மற்றும் சிக்கலான நடைமுறைகளில் ஒன்றாகும். சிறிய பிழை கூட பேரழிவிற்கு வழிவகுக்கும்.
‘Interstellar’ படத்தில், இந்த டாக்கிங் நடைமுறை எவ்வளவு கடினமானது என்பதை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள். படத்தில் காட்டியபடியே, நிலையாக இருக்கும் லேண்டர் அமைப்புடன், புவியில் இருந்து செல்லும் கொரியர் விண்கலம் இணைய வேண்டும்.
இந்தியாவின் SpaDex
இந்த சிக்கலான பணியை தான் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. அதன்படி, PSLV-C60 ராக்கெட் மூலம் Chaser (SDX01) மற்றும் Target (SDX02) எனும் இரண்டு விண்கலன்கள் ஏவப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றும் சுமார் 220 கிலோ எடை கொண்டவையாகும். இந்த இரண்டு விண்கலன்களும் விண்ணில் அதிவேகமாக பூமியைச் சுற்றி வரும் போது, Chaser விண்கலம் Target விண்கலத்தை துரத்தி விரைவாக அதனுடன் இணைய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
PSLV-C60 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட இரண்டு விண்கலங்களும், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 470 கிமீ உயர சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. வரும் நாட்களில் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, விஞ்ஞானிகள் சிக்கலான மற்றும் துல்லியமான டாக்கிங் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இரண்டு விண்கலன்களை இணைப்பது மட்டுமல்லாமல், இணைக்கப்பட்ட இரண்டு விண்கலன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை நடத்த உள்ளனர்.
SpaDex திட்டத்தின் நோக்கங்கள்:
2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ என்கிற இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டம்,
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்,
இந்தியாவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்கள் திட்டம்,
நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும் திட்டங்களுக்கும் இந்த SpaDex சோதனை திட்டம் பயனளிக்கும்