
இந்தியாவின் கோலாகல பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது தீபாவளி. பண்டிகை என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கி, மனதிற்குள் உற்சாகத்தைத் தரும் நாளாக அமைய வேண்டும். தீபாவளிப் பண்டிகையைப் பொறுத்தவரை அப்படி அமைத்தாக வேண்டும் என்கிற சூழலை உருவாக்கிவிட்டது. புதுத்துணி, பலகாரம், பட்டாசு என அவரவர் சக்திக்கேற்பவும், சக்தியைத் தாண்டியும் தீபாவளியைக் கொண்டாடி ஆக வேண்டிய நிர்பந்தம் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்தார் போட்டிருக்கும் உடைகளின் வடிவமைப்புக்கும் தரத்திற்கும் ஏற்ப அணியவேண்டுமென்றால் அதற்கேற்ப பணத்தை செலவு செய்தாக வேண்டும். பக்கத்து வீட்டார் வெடிக்கின்ற பட்டாசு அளவுக்கும் வாண வேடிக்கைகள் அளவுக்கும் வெடித்தால்தான் கௌரவம் என்று நினைத்தால் அதே அளவுக்கு அதிகப் பணம் செலவழித்து பட்டாசுகளை வாங்க வேண்டும். பலகாரங்கள் உள்ளிட்ட மற்றவையும் அப்படியே. அதனால், தீபாவளி என்பது மக்களின் மனது சார்ந்த-அவர்களின் மதம் சார்ந்த வணிகரீதியான பண்டிகையாக மாற்றப்பட்டுவிட்டது.
ஒருவர் அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை குடும்பத்தின் மகிழ்ச்சி என்ற பெயரில் வசூலிப்பதற்கு தீபாவளி நேரத்தை வணிக நிறுவனங்கள் மிகச் சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. துணிக்கடைகள் முதல் நகைக்கடைகள் மட்டுமின்றி, கார் கம்பெனிகள் வரை இதில் ஈடுபாடு காட்டுவதைக் காணலாம். அலுவலகங்களின் இன்சென்டிவ், தொழிற்சாலைகளில் போனஸ் போன்றவை இந்த செலவுக்கு ஈடுகொடுப்பதற்காகவே வழங்கப்படும் தொகையாக மாறிவிட்டது. அல்லது கடந்த ஆண்டு தீபாவளிக்கு வாங்கிய கடனை அடைக்கப் பயன்படும் தொகையாக உள்ளது.
தீபாவளிப் பண்டிகை குறித்து பல புராணக் கதைகள் சொல்லப்படும். அதில் முதன்மையானது, நரகாசுரன் என்கிற அரக்கனை கிருஷ்ணன் கொன்றார் என்றும், தீயவனைக் கொன்ற நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதும் ஒரு கதை. அசுரர்கள்-அரக்கர்கள் என்பவர்கள் தென்னிந்திய பகுதியைச் சேர்ந்தவர்களாக புராணங்களில் பெருமளவில் சித்தரிக்கப்படுவதும், அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கடவுளிடம் முறையிடும் தேவர்கள் வடமாநிலங்களை அல்லது கடவுளர் வாழும் கைலாசம்-வைகுண்டம் பகுதிகளில் இருப்பவர்களாகவும் காட்டப்படுவதால் இந்தக் கதைகளை ஏற்க மறுக்கும் திராவிட இயக்கத்தினர், தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணிப்பது வழக்கம். இதே உணர்வை வடஇந்தியாவின் பூர்வகுடி மக்கள் எனப்படுவோரும் முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய இந்தியா என்பது வணிக நோக்கிலான கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் பழமைவாத சிந்தனை கொண்டவர்களால் ஆளப்படும் இநதியா. அதனால், புராணக் கதைகள் அடிப்படையிலான தீபாவளிக்கு மேலும் முக்கியத்துவம் தரப்பட்டு, அமெரிக்கா-கனடா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களின் விருப்பப்படி விடுமுறை தினமாக அறிவிக்கப்படும் நிலை வரை வந்துள்ளது. உள்ளூர்களிலும் தீபாவளி ஒவ்வொரு குடும்பத்திலும் அதிக செலவுமிக்க பண்டிகையாக இருந்தாலும், ஒரு நாள் செலவழித்து, எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகலாம் என்ற மனநிலை உருவாகியுள்ளது.
கடவுள்-மதம்-வழிபாடு-சடங்கு-பாரம்பரியம் எனப் பல அம்சங்கள் கொண்டிருக்கும் பண்டிகையாக இருந்தாலும் அதைக் கொண்டாடப் பணம் தேவைப்படுகிறது. தாங்கள் எதிர்பார்க்கும் பணம் கிடைக்காத பொழுது, மனிதர்கள் எந்தளவுக்கு நெருக்கடிக்குள்ளாகிறார்களோ, அதுபோல தாங்கள் எதிர்பார்க்காத பணம் கைக்கு வந்து சேரும்போது அவர்கள் தங்களின் எல்லாத் துன்பத்தையும் தற்காலிகமாக மறந்துவிடுகிறார்கள்.
கரூரில் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் 39 குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சத்தை விஜய்யின் த.வெ.க வழங்கியுள்ளது. குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய இளைஞனைப் பறி கொடுத்தவர்கள் உள்பட பணம் பெற்ற குடும்பத்தினர் பலரும், விஜய் முதலமைச்சராவதற்காக எத்தனை உயிரை வேண்டுமானாலும் கொடுப்போம் என்கிற வகையில் பேட்டியளிப்பதும், அது ஊடகங்களில் பரவலாக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது. இதனை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன. இப்படியும்கூடவா பேசுவார்கள் என்று அதிர்ச்சியடைகிறவர்களும் உண்டு.
மனிதர்களின் மனநிலை நிரந்தரமாக இருக்காது. அது உணர்ச்சிகளுக்குட்பட்டது. மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வரும். இன்றைய வாழ்வில் மகிழ்ச்சியின் அளவுகோலாக இருப்பதும், மனிதனை மதிக்கப் பயன்படும் கருவியாக இருப்பதும் பணம்தான். நெரிசலில் இறந்த குடும்பங்கள் பலவும் பண செல்வாக்குள்ளவையல்ல. அவர்களுக்கு ஏற்கனவே அரசு தரப்பில் நிவாரணமாக 10 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளும் தங்களால் ஆன நிதியுதவியை அளித்துள்ளன. 16ஆம் நாள் காரியம் முடிந்து, துக்கம் வடிந்த நிலையில் லம்ப்பாக 20 இலட்ச ரூபாய் அரசியல் கணக்குடன் தரப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்துப் பாருங்கள். மகிழ்ச்சி அடைவது மனித இயல்புதானே!