
திராவிட இயக்க ஆதரவாளர்களும் பெரியார் கொள்கையாளர்களும் தமிழ்நாட்டை பெரியார் மண் என்று சொல்லி வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது பெரியார் மண் அல்ல, பெரியாரே மண்தான். இது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மண், தீரன் சின்னமலை மண், சேர சோழ பாண்டியர்கள் மண் என்று சொல்லி இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பாக பாஜக தரப்பிலிருந்து இதே போல பெரியார் மண் என்பதற்கு எதிரான குரல் ஒலித்தது. இது ஆன்மீக மண், இது பெரியாழ்வார் மண், இது நாயன்மார்கள் மண் என்று அவர்கள் தரப்பில் சொன்னார்கள்.
இது சிங்காரவேலர் மண், இது ஜீவானந்தம் மண் என்று பொதுவுடைமை சிந்தனையாளர்கள் சொன்னாலும் அதுவும் சரியாகத்தான் இருக்கும்.
தமிழ் மண் எவ்வளவு தொன்மையானது என்பதை அண்மையில் வெளியான தொன்மை இரும்பு குறித்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில் அவரவரும் அவரவர் விருப்பத்துக்குரிய ஆளுமைகளின் பெயரை சொல்லி அவர்களின் மண் என்று அடையாளப்படுத்துவது அரசியல் லாபம் தரும் என கணக்கு போடலாம். ஆட்டோ சங்கர் மண் என்று கூட நாளை வரக்கூடிய ஏதேனும் ஒரு தலைவர் சொல்லக்கூடும். அந்த நபரும் இந்த மண்ணில்தானே தன் திறமையை காட்டினார்!
அரசியல் தலைவர்கள் குறிப்பிடும் தமிழ்நாட்டின் ஆளுமைகள் அத்தனை பேரும் அவரவர் துறை சார்ந்த செயல்பாடுகளில் சிறந்து விளங்கியவர்கள். எனினும் இந்த மண் இவருக்குத்தான் சொந்தம் என்று யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லை. பெரியார் மண் என்று இதனை இங்குள்ள தலைவர்கள் குறிப்பிடுவதற்கு முன்பே வி.பி.சிங் போன்ற வடநாட்டு தலைவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற ஆன்மீக நெறி சார்ந்த ஆளுமைகள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருந்திருக்கிறார்கள். தீரன் சின்னமலை போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்தியா எங்கும் இருந்திருக்கிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தேசபக்தியும் தெய்வபக்தியும் கொண்ட தலைவர்கள் நிறைந்த நாடு இது. ஆனால் மற்ற மாநிலங்களில் பெரியாரைப் போல ஒரு சீர்திருத்தவாதி உருவாகி இந்த மண்ணுக்கே உரிய சாதி ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகள் இவற்றிற்கு எதிராக ஒரு இயக்கத்தை உருவாக்கி, தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக அர்ப்பணித்துக் கொண்டு, அந்தக் கொள்கையை, தேர்தல் களத்திற்கு வராமலேயே, யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள் மூலம் நிறைவேற்றிக் காட்டிய ஒரு தலைவர் பெரியாரைப் போல வேறு எந்த மண்ணிலும் கிடையாது. அதனால்தான் பெரியார் மண் என்று வடநாட்டு தலைவர்கள் முதல் தமிழ் நாட்டுத் தலைவர்கள் வரை கட்சி பேதமின்றி குறிப்பிடுகிறார்கள்.
சாதி ரீதியான ரத்தப் பரிசோதனை அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு பெரியார் என்ற பெயர் கசப்பாக இருப்பது இயல்புதான். மதவெறியை தூண்டி அரசியல் நடத்தலாம் என்று நினைத்து, அது இந்த மண்ணில் நடக்காமல் போகும்பொழுது அத்தகைய அரசியல் கட்சிகளுக்கு பெரியார் என்றால் வெறுப்பாக இருக்கவே செய்யும்.
கடவுள் மறுப்பாளரான பெரியார் இறை நம்பிக்கை உள்ள தமிழ்நாட்டு மக்களின் மதிப்பிற்குரிய தலைவராக இருக்கிறார். அவருடைய கருத்துக்கள் இன்றும் மதிக்கப்படுகின்றன. சமூக நீதி கொள்கையால் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பெரியாரை போற்றச் செய்கிறது. மற்றபடி இது பெரியாருக்கே உரிய மண் என்று சொல்வதால், இது அவருக்கு மட்டுமே சொந்தமானது என்பதாக, பெரியார் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவரே கூட ஏற்க மாட்டார்.
அவரை ஏற்க முடியாதவர்கள் அவரே மண் தான் என்று சொல்வதன் மூலம் தங்களை அறியாமலேயே பெரியாரை விளைநிலமாக உயர்த்தி விடுகிறார்கள். இந்த மண்ணில் விளைந்ததெல்லாம் பெரியாரால் தான் என்பதை தங்கள் சொற்களாலேயே உறுதிப்படுத்தி விடுகிறார்கள்.
பெரியார் தன்னுடைய கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் துணிவுடனும் கடுமையுடனும் எடுத்துச் சொன்னவர். அதே நேரத்தில் தன் கொள்கை எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடமும் அளவற்ற பண்பு காட்டியவர். ராஜாஜி உடனும் அவருக்கு நல்ல நட்பு உண்டு. மறைமலை அடிகள், திருவிக குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள சான்றோர்களிடமும் அவருக்கு நல்ல நட்பு உண்டு.
அதுபோலவே பெரியாருக்கு முன்பும் பின்பும் இங்கு வாழ்ந்த அரசியல் தலைவர்கள், சான்றோர்கள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்த படி மாற்றாரை மதித்தனர். இதுதான் தமிழ் மண்ணின் பண்பாடு. இந்த அடிப்படை பண்பாட்டை உணராமல் அரசியலில் வெறியையும் வெறுப்புணர்வையும் விதைக்க நினைத்தால் தமிழ் மண்ணில் நச்சுத்தன்மை ஏறிவிடும். அதன் பிறகு இது யாருடைய மண் என்பதை விட, இந்த மண் யாருக்கு பயன்படும் என்ற நிலை நோக்கி தள்ளப்படும். எச்சரிக்கை.