மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின்னர் அதிமுகவில் உட்கட்சிப்பூசல் வெடித்திருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிர்வாகிகள் விசுவாசமாக இருந்தது போன்று தனக்கு விசுவாசமாக இல்லை. நிர்வாகிகள் சரியாக தேர்தல் வேலை பார்க்கவில்லை என்று ஆலோசனைக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசப்பட்டதாகவும், கட்சியினரை அரவணைத்துச் செல்லாமல் சென்றதுதான் நிர்வாகிகள் சரிவர இயங்காமல் போனதற்கு காரணம் என்று பதிலுக்கு நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை போட்டு வறுத்தெடுத்ததாக அதிமுக மாஜி நிர்வாகிகள் சொல்லி வருகின்றனர்.
அதற்கேற்றால் போல் அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் பற்றி தினம் ஒரு தகவல் வந்துகொண்டிருக்கிறது. வாக்குப்பதிவிற்கு பின்னரே இத்தனை களேபரம் என்றால், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இந்த மோதல் வலுக்கும் என்றே அதிமுக மாஜி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வவத்திற்கு வழங்கப்பட்டிருந்த முதலமைச்சர் பொறுப்பை செங்கோட்டையனுக்கு வழங்கவே முடிவெடுத்திருக்கிறார் சசிகலா என்றும், கட்சி ரீதியாக அப்போது அதில் சிக்கல் எழுந்ததாகவும், அந்த சிக்கலை சமாளிக்கும் வல்லமை அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் இருந்தது. அதனால்தான் அவர் அப்போது முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் அதிமுக மாஜிக்களே சொல்லி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் அதிமுகவை வழிநடத்திச்செல்ல செங்கோட்டையன் தான் சரியானவர் என்று பல நிர்வாகிகள் சொல்லி வந்த நிலையில்தான், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறுகிறார் என்று தகவல் பரவின. இதை தொடர்ந்து செங்கோட்டையன் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், அதிமுகவில் தலைமைப்பொறுப்பு மோதல் உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னர் அந்த பொறுப்பை செங்கோட்டையன் ஏற்க வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி ஏற்க வேண்டும் என்றும் கட்சிக்குள் சலசலப்பு எழுந்திருப்பதாக தகவல் பரவுகிறது.
அதே நேரம், அதிமுகவை உடைக்க அந்த கட்சி வேலை செய்கிறது, இந்த கட்சி வேலை செய்கிறது என்றும் தகவல் பரவி வரும் நிலையில், நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடமும் இதே கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்க, ’’எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்லுவது அழகல்ல’’என்று சொன்னவர், ‘’தேர்தலுக்கு என்னென்ன நடக்கப்போகிறது என்பதெல்லாம் தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, செங்கோட்டையன் தலைமையில் செல்லப்போகிறதா? எஸ்.பி.வேலுமணி தலைமையில் செல்லப்போகிறதா? என்பதும் தெரியும்.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். செங்கோட்டையன் பொறுப்புக்கு வரவேண்டும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆக, அதிமுகவில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த பிளவை நாங்கள் செய்ய மாட்டோம். பாஜக செய்யும்’’ என்று சொல்லி பரபரப்பை கூட்டியிருக்கிறார்.