இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவில், பெரும்பான்மை வாக்குகளை பெற்று இலங்கை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று அரியணை ஏறியுள்ளார். இலங்கையில் முதல் முறையாக மார்க்சியம்-லெனினிச கொள்கைக் கொண்ட பொதுவுடமை கட்சி ஆட்சியை பிடித்திருக்கிறது.
அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)
AKD என பிரபலமாக அறியப்படும் அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவராக உள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவராகவும் இருக்கும் இவர், தீவிர மார்க்சியம்-லெனினிச கொள்கைகளை உடையவர் ஆவார்.
நவம்பர் 24, 1968-ம் ஆண்டில் பிறந்த அநுரகுமார திசாநாயக்க, பள்ளிப் பருவத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 1987-ல் அக்கட்சியில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட அநுரகுமார திசாநாயக்க, முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
அவர் அக்கட்சியில் இணைந்த காலக்கட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டிருந்தது மக்கள் விடுதலை முன்னணி கட்சி.
ஆயுதக் கிளர்ச்சி
ரோகண வீஜயவீர என்பவரால் கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி கட்சி, 1971-ம் ஆண்டு இலங்கை அரசுக்கு எதிராக தனது முதல் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்திருந்தது.
சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாக அறிவித்து கட்சியை தொடங்கிய ரோகண வீஜயவீர, அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவாக மக்கள் விடுதலை முன்னணி கட்சியில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.
1971, 1983, 1987-1990 ஆகிய காலக்கட்டங்களில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் முறியடிக்கப்பட்டது.
அதே காலக்கட்டங்களில், பல முறை அந்த கட்சி இலங்கை அரசால் தடை செய்யப்பட்டும் பின்னர் தடையை விலக்கியும் வந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக் கிளர்ச்சிகளின் போது, இலங்கைக்கு உதவியாக போரில் ஈடுபட்ட இந்தியா தனது 14 ராணுவ வீரர்களை இழந்தது.
இவ்வமைப்பின் ஆயுத கிளர்ச்சிகளால் இலங்கையில் 60,000 முதல் 80,000 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் தமிழர்கள் என கூறப்படுகிறது.
இறுதியில் 1989 நவம்பர் மாதம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண வீஜயவீர இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
1990-ம் ஆண்டு முதல்
பின்னர் 1990-ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சோமவன்ச அமரசிங்க, இலங்கையில் இருந்து தப்பி ஐரோப்பிய நாடுகளில் சுமார் 12 ஆண்டுகள் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியை பிற ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து, மறுசீரமைத்து ஒழுங்குப்படுத்தினார்.
1994 முதல் தற்போது வரை இலங்கையில் நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்று வருகிறது.
2001-ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றது. 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சியை அமைத்தது.
தொடர்ந்து அக்கட்சியை வலுப்படுத்தி வந்த சோமவன்ச அமரசிங்க, கடந்த 2014-ம் ஆண்டு தலைவர் பொறுப்பை அநுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைத்தார்.
மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினைப் பின்பற்றி வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றிற்கு எதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் 28 சிறிய அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற கூட்டணியை அமைத்தார் அநுரகுமார திசாநாயக்க.
கடுமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்த அனுரகுமார திசாநாயக்க, 2022-ம் ஆண்டு இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசுக்கு எதிராக நடைபெற்ற ‘Aragalaya’ என்ற மக்கள் புரட்சிக்கு மிக முக்கிய பங்காற்றியதாகவும் கூறப்படுகிறது.
அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கையில் நிலவிய தலைமைத்துவ வெற்றிடத்தை அனுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது கட்சியும் பயன்படுத்திக் கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனுரகுமார திசாநாயக்க வெறும் 3.19% வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்த நிலையில், தற்போது 2024 அதிபர் தேர்தலில் சுமார் 42.31% வாக்குகளை பெற்று வெற்றி அணைந்துள்ளார்.
இலங்கை மக்களிடம் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தியும், சமூக நீதி மற்றும் ஊழலுக்கு எதிரான தனது கொள்கை பிரச்சாரங்களால் அனுரகுமார திசாநாயக்க மக்களை ஈர்த்து அவர்களின் ஆதரவை பெற்று தற்போது அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இலங்கையின் 9-வது அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க, தன்னுடை ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன் என்றும் சவால்மிக்க பொருளாதார சூழலுக்கு மத்தியில் அதிபராக பொறுப்பேற்றுள்ளதால், அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.