இலங்கையில் வரும் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, தமிழப் பொது வேட்பாளராக அரியநேந்திரன் உள்ளிட்ட 39 பேர் களம் காண்கின்றனர்.
முக்கிய அதிபர் வேட்பாளர்களின் பின்னணி
ரணில் விக்கிரமசிங்கே, 75
இலங்கை பிரதமராக 6 முறை பதவி வகித்தவரும் வழக்கறிஞருமான ரணில் விக்கிரமசிங்கே தற்போதைய அதிபர் தேர்தலில் முதன்மை வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்சவை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கே அதிபர் பொறுப்பை ஏற்றார்.
இலங்கை பொதுஜன முன்னணி(SLPP) கட்சி சார்பில் 2019 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சேவின் 5 ஆண்டு அதிபர் பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்தை நிறைவு செய்ய ரணில் விக்கிரமசிங்கேவை இலங்கை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது.
SLPP கட்சியின் ஆதரவுடன் அதிபர் காலத்தை நிறைவு செய்த ரணில், தற்போதைய அதிபர் தேர்தலில் அந்த கட்சியின் ஆதரவை பெற தவறியுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி(UNP), SLPP கட்சியில் இருந்து பிரிந்த பிரிவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, மற்றும் மகாஜன எக்சத் பெரமுனா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.
சஜித் பிரேமதாச, 57
இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் கூட்டணி(SJB) சார்பில் அதிபர் தேர்தலில் களம் காண்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் UNP கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச, அந்தக் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடால் ஐக்கிய மக்கள் கூட்டணி(SJB) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
2020 இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி(SJB), 225 தொகுதிகளில் 54 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுர குமார திசநாயக்க, 55
இலங்கையின் 3-வது பெரிய கட்சியான மக்கள் விடுதலை முன்னணி(JVP) கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மார்க்சிஸ்ட் சார்பு கொள்கை உடைய அனுர குமார திசநாயக்க கடுமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாமல் ராஜபக்சே, 38
இலங்கையின் இரண்டு அதிபர்களை உருவாக்கிய சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தின் வாரிசு – நாமல் ராஜபக்சே SLPP கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இலங்கை முன்னாள் அதிபர்கள் மஹிந்த ராஜபக்சே மகனும் கோத்தபய ராஜபக்சேவின் பெறாமகனுமான நாமல் ராஜபக்சே SLPP கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்கும் கடினமான பணியை எதிர்கொண்டு வருகிறார்.
SLPP கட்சியின் ஒரு பிரிவினர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியநேந்திரன்
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய 7 அரசியல் கட்சிகள் சார்பில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான பா. அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.
இலங்கை தேர்தல் வாக்கெடுப்பு முறை
இலங்கையில் நேரடி மக்கள் வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவார். வாக்காளர்கள் 3 அதிபர் வேட்பாளர்களை தரவரிசை விருப்பங்கள் மூலம் தேர்வு செய்யலாம்.
அதாவது முதல் விருப்பம், 2-வது விருப்பம், 3-வது விருப்பம் என்கிற அடிப்படையில் வாக்காளர்கள் தேர்தலில் தங்களின் விருப்பங்களை பதிவு செய்யலாம்.
எந்தவொரு வேட்பாளரும் முதல் விருப்ப எண்ணிக்கையில் 50% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறவில்லை என்றால், அதிக வாக்குகளைப் பெற்ற 2 வேட்பாளர்களைத் தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்படுவார்கள்.
நீக்கப்பட்ட வேட்பாளர்களின் 2-வது மற்றும் 3-வது விருப்பத்தேர்வுகளை வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்படும். முதல் 2 வேட்பாளர்களில் ஒருவர் முழுமையான பெரும்பான்மையைப் பெறும் வரை, மக்களின் விருப்பத்தேர்வுகள் எண்ணப்படும்.
இலங்கை அதிபர் தேர்தல் தேதி
இன்று (செப்டம்பர் 4) முதற்கட்ட அதிபர் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறும் நிலையில் தபால் வாக்குகள் பதிவு பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது.
அதிபர் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டால் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதிபர் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை நடத்துவதைத் ஊடகங்கள் தவிர்க்குமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.