நீட் விலக்கு என்பதே கிடையாது. அனைத்து மாநிலத்தவரும் நீட் தேர்வு எழுதியே ஆகவேண்டும். நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அதன்படி தான் நீட் தேர்வு நடத்தி வருகிறோம். நீட் தேர்வினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொய்யான, தவறான தகவலை பரப்பிக்கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின் என்றெல்லாம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு நீட் தேர்வு தோல்வியால் தஞ்சாவூரில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ’’உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை முதல்வர் உணரவேண்டும்’’ என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பதிவைக்கண்டு வெகுண்டெழுந்துள்ளார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு 13 அப்பாவிகளை துள்ளத் துடிக்க கொன்று ரத்தகறை படிந்த கைகளில்தான் இந்த ட்விட்டை போட்டிருக்கிறார் பழனிசாமி என்று சொல்லும் சிவசங்கர், நீட் தேர்வினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தவறான பொய்யை மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் என ஆட்சியில் இருந்த போது பேசியே அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின், வைசியஸ்ரீ, ரிதுஸ்ரீ, மோனிஷா, கீர்த்தனா, ஹரிஷ்மா, ஜோதி ஸ்ரீதுர்க, ஆதித்யா, மோதிலால், விக்னேஷ்,, சுபஸ்ரீ என 14 மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாகி, ரத்தக் கறையை உடல் முழுவதும் பூசிக் கொண்டவர்தான் பழனிசாமி’’ என்கிறார்.
நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே. இப்போது நீட் எதிர்ப்பு போராளி போர்வை போர்த்தி கொண்டு வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று சொல்லும் சிவசங்கர், ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்துவிட்டு, இன்று மாற்றி பேசி வாயை வாடகைக்கு விட்டிருக்கிறாரா பழனிசாமி? ’’எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? என இப்போது சொல்லும் பழனிசாமி, எத்தனை மாணவர்களின் சாவுக்கு காரணமாக இருந்தார்? என்பதை உணர வேண்டும் என்கிறார் .
மேலும், ’தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது’’ என்று சொல்லி மசோதாவை இரண்டு அவையிலும் தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக, நீட் தேர்வை பற்றி எல்லாம் பேசாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளுமாறு பாதம்தாங்கி பழனிசாமியை வலியுறுத்துகிறோம் என்று கடுமையாக சாடியிருக்கிறார் சிவசங்கர்.