வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். அரியலூர் மாவட்டம் முதலிடத்தை தட்டி தூக்கி இருக்கிறது. வேலூர் மாவட்டம் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 26.3.2024 முதல் 6.4.2024 வரை நடைபெற்றன. 4,47,061 மாணவியர்கள், 4,47,203 மாணவர்கள் என 8,94,264 மாணாக்கர்கள் தேர்வெழுதினர். இதில், 4,22,591 மாணவியர்கள் மற்றும் 3,96,152 மாணவர்கள் என மொத்தம் 8,18,743 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் 5.95% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 91.39% என்று இருக்கும் நிலையில், நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 91.55% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
4105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருக்கிறது. 1364 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி கண்டிருக்கிறது. 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
13510 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 12491 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 260 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், வேலூர் மாவட்டம் தேர்ச்சியில் கடைசி இடம் பிடித்துள்ளது.
97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது, 97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம். 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன. குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’மாணவச் செல்வங்களே… உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேல்நிலைக் கல்வி – தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!’’என்று நம்பிக்கை அளித்திருக்கிறார்.