
Graphical Image
ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற இந்திய நிறுவனங்கள் எலான் மஸ்க்கின் Starlink-க்கு போட்டியாக தாங்களும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்து வருகின்றன.
செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல. கடந்த 2014-ம் ஆண்டு முதல் Starlink திட்டத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கிய SpaceX நிறுவனம், 2018 பிப்ரவரியில் சோதனை முறையாக இரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சோதித்தது.
அதை தொடர்ந்து 2019 மே மாதத்தில் முதற்கட்டமாக 60 செயற்கைக்கோள்களை ஏவிய SpaceX, 2025 ஜனவரி மாதம் நிலவரப்படி கிட்டத்தட்ட 7,000 Starlink செயற்கைக்கோள் கூட்டங்களை (Satellite Constellation) விண்ணில் ஏவி இருக்கிறது. எதிர்வரும் காலகட்டங்களில் அந்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை சுமார் 42,000 வரை உயர்த்த SpaceX நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிலவரம் இப்படி இருக்க, அனைவருக்கும் இப்போது எழக்கூடிய கேள்வி இதை எப்படி இந்திய நிறுவனங்கள் செயல்படுத்த போகின்றன? என்பதுதான்.
ஏர்டெல்: இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க தனது தாய் நிறுவனமான பாரதி எண்டர்பிரைசஸின் ஒரு பகுதியாக இருக்கும் OneWeb நிறுவனத்துடன் ஏர்டெல் கூட்டு சேர்ந்துள்ளது. லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் OneWeb, ஏற்கனவே 635 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

OneWeb நிறுவனத்தின் 21.2% பங்குகளை கொண்டு இந்தியாவைச் சேர்ந்த பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் Base Station-களை தயார் செய்துள்ள ஏர்டெல் நிறுவனம், மத்திய அரசிடமிருந்து செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
ஜியோ: லக்சம்பர்க் நாட்டை தளமாகக் கொண்ட SES நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்கு மத்திய அரசின் IN-SPACe மையத்திடம் இருந்து ஜியோ நிறுவனம் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இரு நிறுவனங்களும் தங்கள் சொந்த செயற்கைக்கோள் கூட்டங்களை ஏவுவதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ள செயற்கைக்கோள் வழங்குநர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன. ஏர்டெல் OneWeb நிறுவனத்துடனும், ஜியோ SES நிறுவனத்துடனும் இணைகிறது. தங்களின் சொந்த செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கு பதிலாக இந்த அணுகுமுறை, அதிக செலவுகள் மற்றும் நேரத்தைத் தவிர்க்க உதவும்.
Starlink, OneWeb மற்றும் SES
Starlink, OneWeb மற்றும் SES ஆகியவை முதன்மையாக அவற்றின் செயற்கைக்கோள் சுற்றுப்பாதைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் வேறுபடுகின்றன.
நிறுவனம் | நிறுவிய காலம் | செயற்கைக்கோள் எண்ணிக்கை | சுற்றுப்பாதை | சுற்றுப்பாதை தூரம் (Altitude Range in km) | தொடர்புகொள்ள எடுக்கும் நேரம் (Projected Latency in milliseconds) | Projected Speeds (in Mbps) | கவரேஜ் செயல்திறன் |
SpaceX நிறுவனம் (Starlink) | 2002 (Starlink திட்டம் – 2015) | 7,000 | LEO (Low Earth Orbit) | 500-600 km | 20-40 ms | Up to 500 Mbps | குறைந்த தூர சுற்றுப்பாதை மற்றும் வேகமாக பூமியை சூழல்வதால் உலகளாவிய கவரேஜ்க்கு ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன |
OneWeb (Bharti Enterprises பங்குதாரர்) | 2012 | 630 | LEO (Low Earth Orbit) | 1,200-1,500 km | 70 ms | Up to 195 Mbps | உலகளாவிய கவரேஜ்க்கு அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் தேவை |
SES (லக்சம்பர்க் அரசு நிறுவனம்) | 1985 | 70 | MEO (Medium Earth Orbit), GEO (Geostationary Orbit) | 8,000-12,000 km (MEO), ~35,786 km (GEO) | 100-200 ms (MEO), 500 ms (GEO) | Upto 1 Gbps (High throughput for video/data) | அதிக தூரம் மற்றும் பரந்த பரப்பளவு கொண்ட கவரேஜ் காரணமாக குறைவான செயற்கைக்கோள்களே போதும் |
OneWeb மற்றும் SES நிறுவனங்களின் செயற்கைக்கோள் கூட்டங்கள் தற்போது கடல்சார் பாதுகாப்பு, ராணுவ தளங்கள், தொழில்துறை, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்பட்டு வருகிறது. இவைகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு உபயோகிக்க Airtel மற்றும் Jio நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
செயற்கைக்கோள் இணைப்பு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது?
முதலில், மொபைல் சாட்டிலைட் கனெக்டிவிடி என்பது சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்துவதைப் போன்றது அல்ல. சாட்டிலைட் ஃபோன்கள் அழைப்புகளை மேற்கொள்ளவும் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் முற்றிலும் செயற்கைக்கோள்களை நம்பியிருந்தாலும், அவை அதிக விலை கொண்டவை மற்றும் பாரம்பரிய நெட்வொர்க்குகள் வேலை செய்யாத மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களுக்காக வடிவமைக்கப்படுபவை ஆகும். இந்தியாவில், சாட்டிலைட் ஃபோன்கள் விற்பனையாளர்களில் BSNL நிறுவனமும் ஒன்றாகும்.
இருப்பினும், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் செல்லுலார் நெட்வொர்க்குகளை மட்டுமே சார்ந்துள்ளது. ஆனால் செயற்கைக்கோள் இணைப்புடன், ஒரு வழக்கமான ஸ்மார்ட்போன் ஒரு சாட்டிலைட் ஃபோனாகவும் செயல்படும். இதன் பொருள் செல்லுலார் கவரேஜ் இல்லாத பயனர்களை அவசர காலங்களில் செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் எளிதாக இணைக்க முடியும்.

தற்போது, ஸ்மார்ட்போன்களில் உள்ள பெரும்பாலான செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்கள் அரசின் SOS அவசரகால செய்திகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
செயற்கைக்கோள் இணைப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, ஸ்மார்ட்போன்கள் தரை அடிப்படையிலான செல் கோபுரங்களைச் சார்ந்திருக்காது. பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்களின் நெட்வொர்க்குடன் நேரடியாக இணைக்கப்படும்.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க காலதாமதமாகுவது ஏன்?
சேவையை தொடங்குவதற்கான முக்கிய தாமதம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விவாதம் தான்.
நிர்வாக vs. ஏலம்: செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரமை ஏலம் விடுவதன் மூலம் ஒதுக்கீடு செய்ய ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் விரும்புகின்றன. அதே நேரத்தில் எலான் மஸ்க்கின் Starlink, அமேசானின் Kuiper Project போன்ற சர்வதேச நிறுவனங்கள் நிர்வாக ஒதுக்கீட்டை விரும்புகிறார்கள். இந்திய அரசு இதுகுறித்த முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த பரிந்துரைகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.