
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசு ஊழியர்களின் மிக முக்கியமான கோரிக்கை பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். அதுபோக, பணி நிரந்தரம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணியிடங்களை நிரப்புதல் போன்ற பிற கோரிக்கைகளும் உள்ளன.
தி.மு.க அரசு என்பது அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அரசு என்ற எண்ணம் பொதுமக்களுக்கு உண்டு. 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தைவிட அக்கறையுடனும் தாராளத்தன்மையுடனும் செயல்படக்கூடியவர் என்ற பெயரும் உண்டு. 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதை முதலமைச்சர் பல முறை சுட்டிக்காட்டியுள்ளார். அரசு ஊழியர்கள் சார்பான வாக்குறுதிகள் பலவும் இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றன என்பதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், உரிமைகள் ஆகியவை குறைந்து கொண்டே வருவதுடன், அரசு வேலைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதும் குறைக்கப்பட்டு வருகிறது. நிரந்தர ஊழியர்களுக்குப் பதில் தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தனியார்மயப்படுத்துதல் போன்றவை பல்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மாநிலத்தின் மொத்த நிதியில் 80-90% அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகப் போய்விடுகிறது என்று அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தை திறந்து வைத்து அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதை மறக்க முடியாது. ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தரப்படும் சம்பளம் குறித்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவரான அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கும் பழனிசாமிக்கும் தலைவரான எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் உண்டு. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா-டெஸ்மா போன்ற கொடூர சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தி.முக. ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமைகள் இருக்காது, தங்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படும் என்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கேற்ப மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வும் வாக்குறுதிகளை வழங்கியிருந்த நிலையில், ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தங்களின் முக்கிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது அரசு ஊழியர்களிடமும் ஆசிரியர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய ஓய்வு ஊதியத்திட்டம் என்பது மீண்டும் சாத்தியமா என்பதே தெரியாத நிலை உள்ளது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையினர், பிற அரசுத் துறையினர் பணிச்சுமையால் அவதிப்படுகிறார்கள். தற்காலிப் பணியாளர்களும் ஒப்பந்தப் பணியாளர்களும் தங்கள் ஆயுட்காலத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுமா என்பது தெரியாமல் தவிக்கின்றனர். கௌரவ விரிவுரையாளர்கள் யு.ஜி.சி. சொன்னதுபோல தங்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் தங்களின் ஊதிய உயர்வு-ஊதிய நிலுவை ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். 4000த்துக்கும் அதிகமான கல்லூரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருப்பதும், அதற்கானத் தேர்வு எப்போது-எந்த அடிப்படையில் நடைபெறும் என்பது 4 ஆண்டுகளாகத் தெரியாமலே இருப்பதும் அந்தப் பணிக்குரிய தகுதியுடன் தேர்வுக்குத் தயாராகி வருபவர்களுக்கு பெரும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.பி.ஆர்.ஓ. எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிடங்களை எந்த முறையில் நியமிப்பது என்பதை கடந்த 4 ஆண்டுகளாக முடிவு செய்யாமல் இழுத்தடிக்கிறது அரசு. போக்குவரத்து-மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் குமுறல்கள் வெளிப்படுகின்றன.
தி.மு.க. ஆட்சி மீது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்தளவுக்கு சலிப்பு-வெறுப்பு-கோபம் இதுவரை ஏற்பட்டதில்லை. தாங்கள் கைவிடப்பட்டதாக அவர்கள் பரிதவிக்கும் நிலையில், முதலமைச்சர் அறிவித்துள்ள அமைச்சர்கள் குழு, இனியும் காலந்தாழ்த்தாமல் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நல்ல அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தி.மு.க ஆட்சியின் மீது வைத்திருக்கும் கடைசி நம்பிக்கை இது.
அரசு ஊழியர்களின் பக்கம் நின்று அவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அருமையாக ஆழமாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது மிகச் சிறப்பு. இவ்வளவு மெனக்கட்டு எழுதப்படும் தலையங்கம் குறைந்தபட்சம் சில ஆயிரம் பேரையாவது சென்று சேர்ந்தால் நல்லது. எத்தனை பேரை போய்ச் சேருகிறது என்பதற்கான வியூஸ் வைக்கலாம்.