பிரிட்டிஷ் ஆட்சியில் ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாடு பதறியது. அந்த அடக்குமுறை சட்டத்தை எதிர்த்துப் போராட முடியுமா என்று தலைவர்கள் யோசித்தனர். அந்த நேரத்தில் சென்னையில் இருந்தார் காந்தி. உறக்கமில்லாத இரவுக்குப் பின் முடிவெடுத்தார், ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவது என்று. அதுதான் இந்திய விடுதலைக் களத்தில் நாடு தழுவிய அளவில் நடந்த முதல் போராட்டம். ஒரு முறை மதுரைக்கு வந்த காந்தியிடம் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவுதான் அவருடைய எளிமையான உடை. அதே உடையுடன்தான் அவர் லண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் சட்டத்தைத் திருத்த வலியுறுத்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தது தமிழ்நாடு. இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என பெரியார் போராடினார். அண்ணா போராடினார். திராவிட இயக்கங்களின் போராட்ட வலிமையை டெல்லியிடம் எடுத்துரைத்தார் காங்கிரஸ் தலைவர் காமராஜர். அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த அடுத்த ஆண்டிலேயே அதில் திருத்தம் செய்யப்பட்டது. சென்னை நிகழ்வின் காரணமாக இந்த திருத்தம் செய்யப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் சொன்னார் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு.
இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக இளைஞர்களும் மாணவர்களும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு தமிழைக் காத்திட்ட வரலாற்றை இப்போதும் இந்தியாவின் பிற மாநிலங்கள் ஆச்சரியத்துடன் படிக்கின்றன. தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வமாக நடந்த மொழிப் போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று மாநில மொழிகள் காக்கப்பட வேண்டும் என்று அந்தந்த மாநிலங்களில் இருந்தும் குரல் ஒலிக்கிறது. 1967ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் மாநிலக் கட்சியின் ஆட்சி அமைந்தது. அதுதான் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்பதற்கான அடையாளமாக அமைந்தது. இன்று காஷ்மீர், மேற்குவங்கம், ஜார்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளே ஆட்சி செய்கின்றன.
தமிழ்நாடு உருவாக்கும் அரசியல் விளைவுகள் இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கக்கூடியவை. இந்தியாவில் கூட்டணி ஆட்சியை உருவாக்குவதிலும், 5 ஆண்டுகாலம் முழுமையாகக் கூட்டணி ஆட்சி நடைபெறவும் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளின் நிலைப்பாடே காரணமாக அமைந்தது. அதனால்தான் தேசிய கட்சிகளின் பார்வை மாநில நலன்களின் பக்கம் திரும்பியது. மாநிலத்தில் தங்கள் கட்சிக்கும் செல்வாக்கு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் செய்யத் தொடங்கின.
அரசியல் களத்தில் தமிழ்நாடு முன்மாதிரியான மாநிலம். கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் இந்த மாநிலத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் கவனிக்கத்தக்கவர்களாக இருந்தனர். காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் முன்னெடுத்த அரசியல் குறித்த விமர்சனப் பார்வைகள் இருந்தாலும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதற்கு காரணம், ஆளுங்கட்சியின் போக்கிற்கு கடிவாளம் போடும் வகையில் எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியின் வியூகத்தை அறிந்து செயல்படும் ஆளுங்கட்சியும், அதனை உணர்ந்து ஊடகங்கள் முன்னெடுத்த செய்திகளுமே இதற்கு அடிப்படையாகும்.
ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள் என்பவர்கள் ஆட்சியில் இல்லாத நேரத்திலும் அரசியலை இயக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்த நிலையை இப்போது காண முடியவில்லை. ஏறத்தாழ 70 எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அதன் செயல்பாடுகள் கவனத்தை ஈர்ப்பதேயில்லை. ஆளுங்கட்சிக்கு சவாலான அளவில் எதிர்க்கட்சி வலிமையுடன் இருக்கிறதா என்பதும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு அ.தி.மு.க. சென்றதைப் பார்க்கும்போது இந்த சந்தேகம் அந்தக் கட்சியின் தொண்டர்களிடமே அதிகரித்து வருகிறது.
அ.தி.மு.க.வின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கடும் முயற்சி செய்ய, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பா.ஜ.க., நா.த.க, பா.ம.க. போன்ற கட்சிகளின் செய்திகள் வெளியாகின்ற வகையில் அ.தி.மு.க. பற்றிய செய்திகள் வெளியாவதில்லை. எதிர்க்கட்சியின் பணி என்பது ஜனநாயகத்தில் மிக முக்கியமானது. அது தன் கடமையிலிருந்து தவறும்போது ஆக்கப்பூர்வமான விவாதங்களிலிருந்து விலகி, அக்கப்போரான பேச்சுகளே தலைப்புச் செய்திகளாகும். அதில் ஒன்றுதான், ஆதவ் அர்ஜூன் பற்றிய முக்கியத்துவம்.
ஆதவ் அர்ஜூன் என்பவர் அரசியலில் எத்தனை காலம் அனுபவம் வாய்ந்தவர், அவர் சந்தித்த களங்கள் எத்தனை, அவருடைய அரசியல் பணிகள் என்னென்ன, மக்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, அவர் எம்.பி.யா, எம்.எல்.ஏ.வா, கவுன்சிலரா? இப்படி அடுக்கிக்கொண்டே போகும் கேள்விகளுக்கு நேர்மறையான எந்த பதிலுக்கும் தகுதியில்லாத ஒரு நபரின் தனிப்பட்ட செயல்பாடே ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி, தலைமைச் செயலகம் வரை பஞ்சாயத்து நடக்கும் விவகாரமாக மாறியிருக்கிறது. இதற்கென வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகள், அதில் பங்கேற்க வைக்கப்பட்டவர்கள், அவர்களுக்காக எழுதப்பட்ட உரைகள் இவையெல்லாமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருப்பதும் அவற்றைப் பின் தொடர்ந்து ஊடகங்களும், அரசியல் களமும் இயங்குவதும் தமிழ்நாட்டின் அரசியல் தரம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை முன்வைக்கிறது.