ஆஸ்திரியாவில் மாயமான மாடல் அழகி ஸ்டெபானி பைபர் வனப்பகுதியில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதள பிரபலம் ஸ்டெபானி பைபர்
ஆஸ்திரியாவின் கிரேஸ் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெபானி பைபர் (Stephanie Piper) (31). இவர் பிரபல அழகு கலை நிபுணர் மற்றும் மாடல் அழகி ஆவார். மேலும், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமான இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
மர்மமான முறையில் மாயம்
ஸ்டெபானி பைபர் நவம்பர் 23ம் தேதி கிறிஸ்துமஸ் விருந்து ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, தனது தோழிக்கு தான் பாத்திரமாக வீட்டிற்கு வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில், வீட்டில் மற்றொருவர் இருப்பதுபோல் இருக்கின்றது என்றும் பயமாக உள்ளது என்றும் மீண்டும் தனது தோழிக்கு ஸ்டெபானி பைபர் குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில், ஸ்டெபானி பைபர் மர்மமான முறையில் மாயமானார்.
போலீசார் தீவிர விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவர் சமூக வலைதள பிரபலம் (Social media popularity) என்பதால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சூட்கேஸுக்குள் ஸ்டெபானி பைபர் சடலமாக மீட்பு
ஸ்லோவேனியாவில் உள்ள ஒரு தொலைதூர வனப்பகுதியில் ஒரு சூட்கேஸ் (Suitcase) மர்மமான முறையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இதனையடுத்து, ஸ்டெபானி பைபர்உடல் சூட்கேஸுக்குள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடலை மீட்டு வழக்கை தீவிரப்படுத்தினர்.
முன்னாள் காதலரிடம் விசாரணை
ஸ்லோவேனியா எல்லையில் உள்ள சூதாட்ட விடுதி அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தீப்பற்றி எரிந்த கார் ஸ்டெபானியின் முன்னாள் காதலருடையது எனத் தெரியவந்தது. தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் 31 வயதான அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காதல் முறிவால் கொலை செய்ததாக வாக்குமூலம்
ஸ்டெபானி பைபர் தன்னை காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் ஸ்டெபானி பைபர் காதலை முறித்து கொண்டதாகவும் ஸ்டெபானி பைபரின் முன்னாள் காதலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஸ்டெபானி பைபரை கொலை செய்ய திட்டம் தீட்டி, அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்டெபானி பைபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஸ்டெபானி பைபரை கொலை செய்து உடலை சூட்கேஸுக்குள் அடைத்து புதைக்க காதலனின் சகோதரர் மற்றும் வளர்ப்புத் தந்தை உதவியதாக தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ஸ்டெபானி பைபரின் முன்னாள் காதலன், அவரது சகோதரர் மற்றும் வளர்ப்புத் தந்தை ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
