நடப்பு மக்களவைத் தேர்தலில் முதல் 3 கட்டங்களில் பதிவான குறைவான வாக்குப் பதிவு விகிதங்களின் தாக்கங்களால், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மூன்று நாட்களில் (மே 4-7) , சென்செக்ஸ் ஏறக்குறைய 1,000 புள்ளிகளுக்கு மேல் இழந்து பங்குகளின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் சுமார் ரூ.11 லட்சம் கோடி வரை குறைந்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இந்திய சந்தைகளில் அதன் தாக்கம் பிரதிபலிக்காமல் நிலையற்றத் தன்மையுடன் உள்ளது. இதற்கு, இந்திய சந்தைகளில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை கணிசமாக விற்று வருவது ஒரு காரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சந்தைகளின் ஏற்ற இறக்கம் மற்றும் அச்சத்தை அளவிடும் இந்தியா VIX குறியீடு, கடந்த 52 வாரங்களில் இல்லாத வகையில் 66% உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்படும் வரை, இந்த ஏற்ற இறக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச் சந்தையின் இந்த நிலையற்றத் தன்மைக்கான காரணங்கள் என்ன?
- நடப்பு மக்களவைத் தேர்தலின் முடிவைச் சுற்றியுள்ள ‘நிச்சயமற்ற தன்மை’ முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று கட்டத் தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவு விகிதங்களால் ஆளுங்கட்சியின் வெற்றியை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
- சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை சாதனை உச்சத்தை நெருங்கி வருவதால், PE விகிதம் and price-to-book விகிதம் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் அதிக சந்தை மதிப்பீட்டின் காரணமாக 1,000 முதல் 4,000 புள்ளிகள் வரை சாத்தியமான சரிவுகள் ஏற்படலாம் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
- மே மாதத்தில் மட்டும் இதுவரை ரூ. 5,525 கோடி மதிப்பிலான கணிசமான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) விற்றதும், சந்தை இறக்க நிலையில் செல்வதற்கு வழிவகுத்துள்ளது.
- 2023-24 நிதியாண்டின் 4-வது காலாண்டு சந்தை முடிவுகள் முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியுள்ளது. சில பெரு நிறுவனங்களின் எதிர்மறையான நிதி அறிக்கையாலும், மந்த நிலை ஏற்பட்டுள்ளது.