கடந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தலைவர் எஸ். சோமநாத் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
வயிற்றுப் புற்றுநோய் என்பது ஆண்கள் மத்தியில் அதிகம் காணப்படும் 5-வது பொதுவான புற்றுநோயாகும். மேலும் இந்தப் புற்றுநோய் மிகவும் தெளிவற்ற மற்றும் சில நேரங்களில் கண்டறியமுடியாத அறிகுறிகளுடன் வரும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்திற்கு ISRO தலைவர் சோம்நாத் அளித்தப் பேட்டியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-3 மிஷன் நிறைவடைந்தது முதல் சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், ஒரு மாதம் கழித்து செப்டம்பர் மாதத்தில் தான், வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாக கூறினார்.
ISRO Scientist Somnath (File Pic)
வயிற்று புற்றுநோயில் இருந்து குணமடைய அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி எடுத்துக்கொண்டதாகவும், தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் பணியை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
வயிற்றுப் புற்றுநோய்
வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பை புற்றுநோய்) ஒருவரின் வயிற்றைப் பாதிக்கிறது. உங்கள் அடிவயிற்றின் மேல் பகுதியில் உள்ள இரைப்பை குடல் அமைந்துள்ள வயிறுப் பகுதி, நீங்கள் உண்ணும் உணவை பதப்படுத்துவதற்கு பொறுப்பாகும்.
வயிற்றுப் புற்றுநோய் வயது வித்தியாசமின்றி யாருக்கும் வரலாம்.
தொடர் வயிற்று வலி அல்லது அசௌகரியம், கடுமையான எடை இழப்பு, பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம், குமட்டல், வாந்தி, அடிவயிற்று வீக்கம், மலத்தில் இரத்தம் – ஆகியவை வயிற்றுப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:
Representative Image
- உங்கள் தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்
- புகையிலை, மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடுதல்
- சீரான உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுதல்
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்
உங்கள் குடும்பத்தில் இதற்கு முன் யாருக்காவது வயிற்றுப் புற்றுநோய் வந்திருந்தால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன செய்ய வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.
‘வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை’ என்று பார்த்தால் கீமோதெரபி, ரேடியோதெரபி, அறுவை சிகிச்சை போன்றவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
வயிற்றுக்குள் மட்டும் புற்றுநோய் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். அதுவே மற்ற உறுப்புகளுக்கும் பரவி விட்டால் கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
சில சமயங்களில் நோயின் தீவிரத்தை குறைப்பதற்காக அறுவை சிகிச்சைக்கு முன்பு கீமோதெரபி செய்யப்படுகிறது.