தேர்தல் பத்திரங்கள் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிடாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்து தரவுகளையும் முதலிலேயே வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஏன் தேர்தல் பத்திரங்கள் குறித்த எண்களை வெளியிடவில்லை என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதில் எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கைகள் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும் இப்பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிடவும் மார்ச் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எஸ்பிஐ வெளியிட்ட தேர்தல் நன்கொடை பத்திர விவரத்தில் பத்திர வரிசை எண் இல்லாமல் இருந்தது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் உள்ள அனைத்து அடையாள எண்களையும் SBI வங்கி கட்டாயம் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SBI வங்கி ஒரு அரசியல் கட்சிக்காக வாதாடவில்லை என்பதை நீதிமன்றம் நம்புவதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பை SBI வங்கி முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கில் SBI வங்கி நியாயமாக நடந்துகொள்ளவில்லை என கண்டித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரத்யேக அடையாள எண்களை வரும் மார்ச் 21-ம் தேதி மாலைக்குள் SBI வங்கி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் SBI வங்கி சமர்ப்பித்த உடன் இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எந்த தகவலும் விடுபடாமல், இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் மார்ச் 21-ம் தேதி மாலைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் SBI வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.