தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை (RTI) மீறுவதாகவும், இந்தத் திட்டம் சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்களை வழங்க கார்பிரேட் கம்பெனிகளுக்கு அனுமதிக்கும் வகையில் செய்யப்பட்ட கம்பெனி சட்ட திருத்த மசோதாவும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரே திட்டம் ‘தேர்தல் பத்திரங்கள் திட்டம்’ அல்ல; வேறு மாற்று வழிகளும் உள்ளன,” என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திர திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கூறியதாவது:
- தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு 1 உட்பிரிவை மீறும் வகையில் உள்ளது
- பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்கும் போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது
- கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரே திட்டம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அல்ல; வேறு மாற்று வழிகளும் உள்ளன
- கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டதாகக் கூறும் இந்த திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறுகிறது
- இந்த நீதிமன்றம் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மக்கள் அறிந்துகொள்ள உரிமை உள்ளது
- மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர முறை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் SBI வங்கி வழங்க வேண்டும்
- 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும் மற்றும் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை அந்தந்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகள் திருப்பி அளிக்க வேண்டும்
என உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் 2,760.20 ரூபாய் நன்கொடை பெற்றன; இதில் 60.17 சதவீதம் (ரூ.1,660.89) ஆளும் கட்சியான பாஜகவால் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.