’எத்தனை பெரிய மனுதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு’ எனும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது இந்துஜா குழும வழக்கை பார்க்கும்போது. தொழில்துறையில் உலக அளவில் முன்னணி நிறுவனம் நடத்திவரும், பிரிட்டினில் மிகவும் கோடீஸ்வரர் குடும்பமான ஹிந்துஜா குழுமத்தினர் 4 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகின் பெரும் தொழிலதிபர்கள் இவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பு என்றால், இவர்கள் செய்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை பெரிய செல்வந்தர்களா இப்படி அற்பத்தனமாக நடந்துகொண்டார்கள் என்று அதிர்ச்சியை கொடுக்கிறது.
சட்டவிரோதமாக வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தி, அவர்களை மிரட்டி கொத்தடிமைகள் போல் நடத்தி தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு ஒரு நாளைக்கு செலவிடும் தொகையில் மூன்று மடங்கு குறைவாகவே வீட்டு பணியாளர்களுக்கு சொற்பமாக சம்பளம் வழங்கியதற்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்துஜா பிரதர்ஸ் . இவர்கள் மொத்தம் 4 பேர். இதில் ஸ்ரீசந்த், கோபிசந்த் ஆகியோர் லண்டனிலும், பிரகாஷ் ஜெனீவாவிலும், அசோக் மும்பையிலும் வசிக்கிறார்கள்.
மனைவி கமல், மகன் அஜய், அவரது மனைவி நம்ரதா ஆகியோருடன் பிரிட்டனில் வசிக்கிறார் பிரகாஷ் இந்துஜா.
வங்கி, ஆட்டோமொபைல் , ரியல் எஸ்டேட், ஐடி, கப்பல், சுகாதாரம், ஊடகம் என்று பல்வேறு துறைகளில் கால் பதித்திருக்கிறது இந்துஜா குழுமம். இந்தியா உள்பட 37க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்துஜா குழுமத்திற்கு கிளைகள் உள்ளன. அசோக் லேலண்ட், இன்டஸ் இண்ட் பேங்க், இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ், இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் என்று இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது இந்துஜா குழுமம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்துஜா குழுமத்திற்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இவ்வளவு பெரிய செல்வந்தர்கள்தான் மனிதாபிமானம் இல்லாமல் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரகாஷ் குடும்பத்தினர், வீட்டு வேலைக்காக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்சென்று ஒரு நாளைக்கு 15 மணி நேரத்தில் இருந்து 18 மணி நேரம் வரைக்கும் சட்டவிரோதமாக மிரட்டி வேலை வாங்கிக்கொண்டு, இந்திய மதிப்பில் ரூ.667 மட்டும் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் வேலையாட்கள் வெளியேறிவிடுவார்கள் என்று அவர்களின் பாஸ்போர்டையும் மிரட்டி வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி கொத்தடிமை போல் நடத்தியதால் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்கில் கடந்த ஜூன் 17ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணையில், இந்துஜா குடும்பத்தினர் வளர்ப்பு நாய்க்கு ஒரு நாளைக்கு 2,217 ரூபாய், அதாவது 23.51 பிராங்க் செலவு செய்கின்றார்கள். ஆனால், வீட்டு பணியாளர்களுக்கு வெறும் 8 பிராங்க் , அதாவது ரூ.667 மட்டும் வழங்குகிறார்கள் என்பதை கேட்டு நீதிமன்றமே அதிர்ந்திருக்கிறது.
ஊதியம் மட்டும் இல்லாமல் பணியாளர்களுக்கு தங்கும் இடம், உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஊதியத்தை மட்டுமே கணக்கில் கொள்வதா? என்று இந்துஜா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். ஆனாலும் நீதிமன்றம், இந்துஜா குடும்பத்தினரின் அராஜகத்தினை உணர்ந்து, பிரகாஷ்(78), கமால் இந்துஜா(75), ஆகியோருக்கு தலா நான்கரை ஆண்டுகளும், மகன் மற்றும் மருமகளுக்கு தலா 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், மேல்முறையீட்டில் தங்களுக்கு வழகப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படும் என்றும் நம்புகின்றனர் இந்துஜா குடும்பத்தினர்.
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.