
அமெரிக்காவின் நாணயமான டாலரைக் குறிக்க $ என்ற அடையாளம் இருப்பது போலவும், இங்கிலாந்தின் ஸ்டெர்லிங், ரஷ்யா-ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் நாணயங்களை அடையாளப்படுத்த ஒரு வடிவம் இருப்பது போலவும், இந்தியாவின் ரூபாய்க்கு ஒரு வடிவம் வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களின் எண்ணத்திற்கேற்ற வடிவங்களை உருவாக்கித் தந்தனர். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வடிவமைத்த ₹ என்ற அடையாளம் அங்கீகரிக்கப்பட்டது. இது இந்தி மொழியில் (தேவநாகரி வரி வடிவம்) உள்ள எழுத்தை அடிப்படையாகக் கொண்டது. இது தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மும்மொழிக் கொள்கை கட்டாயம் என தற்போதைய பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வலியுறுத்துவதும், அதற்கு எதிராக, இருமொழிக் கொள்கையை ஏறத்தாழ 60 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து பல்வேறு இலக்குகளிலும் முன்னேறியுள்ள தமிழ்நாடு அரசு அதை ஏற்க மறுப்பதும், மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள 2,152 கோடி ரூபாய் நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தருவோம் என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் மொழித்திணிப்புக்கு எதிரானப் போராட்டங்களும், இந்திக்கு ஆதரவாக மாணவர்களிடம் கையெழுத்து வாங்கும் பா.ஜ.க.வினரின் நடவடிக்கைகளும் தொடர்கிற நிலையில், ₹க்குப் பதிலாக ரூ என்ற தமிழ் எழுத்தை முன்வைத்து தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13 அன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் இந்த இலச்சினையால் பா.ஜ.க.வினர் பதற்றமடைந்து எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பதிவில், “அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளத்தை அகற்றுவதன் மூலம், தி.மு.க. ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்ல, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தொடங்கி, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை வரை இதே வகையிலானக் கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பதுடன், “தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான என்.தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்த ₹ அடையாளத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியே வாழ்த்தியிருக்கிறார். ஒரு தமிழரின் படைப்பாற்றலை தி.மு.க அரசு நிராகரித்திருக்கிறது” என்று கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ரூபாய்க்கான வடிவமைப்பை உருவாக்கியவர் தமிழ்நாட்டு இளைஞர் என்பதும் அவர் தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அப்போதே பாராட்டினார் என்பதும் உண்மையே. அது, டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்தது என்பதுதான் முழு உண்மை. அந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கினால்தான் மாநில அரசுக்கான கல்வி நிதியைத் தருவோம் என்று கட்டாயப்படுத்தவில்லை. நெருக்கடி தரவில்லை. தமிழர்களின் பிரதிநிதிகனான நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அப்போதைய மத்திய அமைச்சர் யாரும், “நாகரிகமற்றவர்கள்-ஜனநாயகமற்றவர்கள்” என்று இழிவுபடுத்தவில்லை என்பது அதைவிடவும் உண்மை.
தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்கின்ற நிலையில், தன்னுடைய தனித்துவமான அடையாளத்தைக் காட்டுகின்ற வகையில், தேவநாகரி வரி வடிவத்திலான இந்தி ரூபாய் எழுத்துக்குப் பதில், தமிழ் மொழியில் உள்ள ‘ரூ’ என்பதை தமிழ்நாடு அரசு பயன்படுத்தியிருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கோ தமிழர்களுக்கோ புதியதல்ல. பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தபோது ரூபாய், அணா போன்ற நாணங்கள் இருந்த காலத்திலேயே தமிழில் உரூபா, உரூபாய், ரூபாய், ரூ என்று பயன்படுத்தப்பட்டு வந்ததைக் காண முடியும். இன்றைக்கும் டீக்கடைகள், மளிகைக் கடைகள், ஹோட்டல்கள் என எல்லா இடங்களிலும் ரூ என்ற எழுத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் வீட்டுச் செலவு கணக்கு தொடங்கி, வணிக வரவு-செலவு கணக்கு வரை ரூ என்ற எழுத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்தி எழுத்து வடிவலான ரூபாய் அடையாளத்தை உருவாக்கிய இளைஞரைப் பாராட்டிய கலைஞர் கருணாநிதியும் ரூ என்பதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி வந்தார். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரும் தான் தோற்ற தேர்தர்லகளில் எல்லாம் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது சொத்து மதிப்பு குறித்தும், கையில் உள்ள ரொக்கம் குறித்தும் குறிப்பிட வேண்டிய இடங்களில் எல்லாம் ரூ என்ற தமிழ் எழுத்தைப் பயன்படுத்தித்தான் பணத்தின் மதிப்பைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் Rs என்று நிர்மலா சீதாராமன் அவர்களின் நிதியமைச்சகம் பல அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறது.
தமிர்நாட்டின் ஆட்சி மொழி-அலுவல் மொழி என்பது தமிழ்தான். ஒரு மாநிலம் தனது ஆட்சிமொழியில் ரூபாய்க்கான அடையாளத்தைக் குறிப்பிடுவது எப்படி பிரிவினைவாதமாகும்? மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழைக் கற்றுத்தருவோம் என்று சொல்லும் பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தைப் பயன்படுத்தினால் ஏன் கொந்தளிக்க வேண்டும்? அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அம்பலப்படுத்திவிட்டது, ரூ.
kq4hjf