குமரி முனையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவைக் கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சிலை, 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தென்மலையின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.
தமிழ் உள்ளிட்ட திராவிட மொழி குடும்பத்தினர் வாழ்ந்த மூத்த நாகரிகமான சிந்து வெளி நாகரிகம் குறித்த அகழாய்வுகளை வெளியிட்ட நூற்றாண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின்
வடக்குப் பகுதியில் இருந்து காலம் காலமாகப் பதிவு செய்யப்பட்டு வந்து புராண-இதிகாசங்களே இந்தியாவின் வரலாறு எனவும், சமஸ்கிருதமும் அதில் எழுதப்பட்ட வேதங்களுமே இந்தியாவின் சிறப்புகள் என்று இங்குள்ளவர்களும் மேலை நாட்டவர்களும் நம்பியிருந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் கற்பிதங்களைத் தகர்த்து எரிந்தது நூறாண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ- ஹரப்பா அகழாய்வுகள்.
அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில், இன்றைய பாகிஸ்தானின் சிந்து-பஞ்சாப் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் வாயிலாக, உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றான சுமேரிய-மெசப்படோமிய நாகரிகத்திற்கு இணையான, கி.மு.3000 ஆண்டுக்கு முற்பட்ட நாகரிகம் ஒன்று இந்தியாவில் சமஸ்கிருத வேதகாலத்திற்கு முன்பே இருந்தது என்ற ஆய்வு முடிவை அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல்துறைத் தலைவர் சர் ஜான் மார்ஷல் இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ் (Illustrated London News) இதழில் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் வெளியிட்டார்.
மிகச் சிறந்த நகர நாகரிகமாகத் திகழ்ந்த அந்த சிந்து வெளி நாகரிக காலத்தில் சுட்ட செங்கற்களால் ஆன அடுக்கு மாடிக் கட்டடங்கள், அகலமான சாலைகள், விளையாட்டுத் திடல்கள், பல அறைகளைக் கொண்ட வீடுகள், குளியல்-கழிப்பிட வசதிகள், நீர்நிலைகள், வடிகால்கள் உள்ளிட்ட அனைத்தும் கட்டமைக்கப்பட்டிருந்ததை அகழாய்வுகள் மெய்ப்பித்தன.
அங்கே வாழ்ந்தவர்கள்? யார் என்ன மொழி பேசினார்கள்?
“சிந்துவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு எந்தவிதத்திலும் சமஸ்கிருதத்துடன் தொடர்பில்லை. அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசினார்கள். அவை அனைத்தும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை” என்பதே சர் ஜான் மார்ஷல் முன்வைத்த முக்கியமான முடிவாகும்.
ஆரியர்கள் இந்த மண்ணில் நுழைவதற்கு முன்பாகவே செழித்துச் சிறந்திருந்தது சிந்துவெளி நாகரிகம் என்பதும், சமஸ்கிருத மொழியும் வேதங்களும் அதன் பிறகே நுழைந்தன என்பதும் பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டு வருகின்றன.
அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப் என ஆய்வாளர்களும் வரலாற்றுப் பார்வையுடனான எழுத்தாளர்களும் இதனைப் பதிவு செய்துள்ளனர். மரபணு ஆய்வுகள், கணினி தொழில்நுட்பம் வாயிலாகவும் இதே கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளது.
திராவிட மொழிக் குடும்பம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது என்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடும்போது, “திராவிடர்கள், நாகர்களாக தென்னிந்தியாவில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்பது வரலாற்று உண்மை” எனத் தெரிவித்திருக்கிறார். தமிழ் என்பது எப்படி சமஸ்கிருத வடிவத்தில் திராவிடம் என்ற சொல்லாக உருத் திரிந்தது என்பதையும் எடுத்துரைக்கும் டாக்டர் அம்பேத்கர், “தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழியாக மட்டும் இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாக இருந்தது” என நிறுவுகிறார்.
மொகஞ்சதாரா-ஹரப்பா அகழாய்வுகள் நடைபெற்ற இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தின் பழங்குடி மக்கள் பேசும் மொழியான ப்ராஹூயி என்பது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை மொழியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவின் கோண்டுவானா காடுகளில் வாழும் மக்கள் பேசும் மொழியும் திராவிட மொழிக் குடும்பமே. இன்னும் பல திராவிட மொழிகள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானம் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன.
சிந்து வெளி நாகரிக பண்பாடு தொடர்பான அகழாய்விலும், கீழடியில் நடைபெற்ற தமிழர்களின் வைகை ஆற்று நாகரிக அகழாய்விலும் கிடைத்த எழுத்துகள், முத்திரைகள், பகடைகள், சுட்டசெங்கற்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட பலவற்றில் ஒற்றுமையைக் காணலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் இது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு விரிவான புத்தகமாகப் பதிவிட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
ஆரியர்களுக்கு முற்பட்ட நாகரிகம் என்று சிந்துவெளி நாகரிகம் 100 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்ட நிலையில், அதனை சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் வேதகால நாகரிகமாகக் காட்டுவதற்கான ஆராய்ச்சிகளும் ஒரு தரப்பினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வுகள் என்பவை தொடர் செயல்பாடுகள். அவை நிச்சயம் உண்மையை நிரூபிக்கும்.
சர் ஜான் மார்ஷலுக்கு தமிழ்நாட்டில் முழு உருவச் சிலையும், ஆய்வாளர்கள் பங்கேற்கும் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு முன்னெடுப்பதுடன், குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்த இருக்கிறது. இந்த இரண்டும் வரலாற்று நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டியதன் தேவையை, காலம் உணர்த்துகிறது.