
Katchatheevu
தமிழ்நாட்டு அரசியலில் அடிக்கடி அடிபடும் பெயர் கச்சத்தீவு. ஒரு கட்சியின் மீது இன்னொரு கட்சி குற்றம்சாட்டுவதற்கும், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் பெயர் இது. 1.15 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஆட்கள் யாருமில்லாத தீவாகும். இராமநாதபுரம் சமஸ்தானத்திடம் இருந்த இந்தத் தீவு, 1974ல் இலங்கை அரசிடம் இந்திய அரசால் ஒப்படைக்கப்பட்டது. அதுதான் இப்போது வரை அரசியல் சர்ச்சையாக அடிக்கடி வெளிப்படுகிறது.
1974ல் இந்திய பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்திராகாந்தியின் காங்கிரஸ் கட்சியும், கலைஞர் கருணாநிதி தலைமை வகித்த தி.மு.க.வும் தற்போது ஒரே கூட்டணியில் உள்ள நிலையில், கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க.தான் என மீண்டும் ஒரே கூட்டணியாகப் போகும் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் குற்றம்சாட்டுகின்றன. இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு அடிப்படையிலான முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. எனவே, கச்சத்தீவை இலங்கைக்கு தருவதாக முடிவெடுத்தது இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசுதான். அதற்கு, கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசும், தி.மு.க.வும் எதிர்ப்புத் தெரிவித்தன.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இதற்கு எதிரான கருத்துகள் வைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்விளைவாக, இலங்கையிடம் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டாலும், அந்தப் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் என்ற உரிமை நிலைநாட்டப்பட்டது. இது ஓரளவு சமாதானமாக இருந்தாலும், அந்த உரிமையும்கூட 1976ல் எமர்ஜென்சி காலத்தில் பறிபோய்விட்டது. கச்சத்தீவு முழுக்க முழுக்க இலங்கைக்கு சொந்தமானது.
1977 முதல் இலங்கையில் இன விடுதலைப் போராட்டம் ஆயுதபாணியில் தொடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களை மட்டுமின்றி, அவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ்நாட்டு மீனவர்களையும் தாக்கத் தொடங்கியது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லவும் இலங்கை கடற்படை தயங்கவில்லை. ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தொடர் தாக்குதல்களுக்குள்ளாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகள் வரும்போதெல்லாம் கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்க தி.மு.க துணை போனது என்று அ.தி.மு.க. குற்றம்சாட்டும். அதனுடன் கூட்டு சேர்ந்து நிற்பவர்களும் அதையே சொல்வார்கள்.
கச்சத்தீவை மீட்பேன் என 1991ல் கோட்டையில் முதன்முதலாகக் கொடியேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா சபதமிட்டார். பின்னர் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வின் உண்மை நிலை என்னவென்று பார்த்தால், 1974ல் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்ற தீர்மானத்தில் கையெழுத்திட்டபோது, அதில் கையெழுத்திடாத ஒரே கட்சி அ.தி.மு.க.தான். பின்னர், 1994ல் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில், “கச்சத்தீவு என்ற சிறிய பகுதி தீவு நாடான இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது இரு நாட்டு நல்லுறவின் அடிப்படையில்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பிறகு, 2003ல் பிரதமர் வாஜ்பாய்க்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திலும், கச்சத்தீவு பகுதியை தமிழக மீனவர்களின் நலனுக்காகக் குத்தகைக்கு பெறலாம். அதே நேரத்தில், கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார். முதன்முதலில் கோட்டையில் கொடியேற்றியபோது, கச்சத்தீவை மீட்பேன் என்று சொன்ன ஜெயலலிதா, கடைசியாக 2016ல் கொடியேற்றும்போதும் அதையேதான் சொன்னார். சொல்லையும் மாற்றவில்லை. தீவை மீட்கவுமில்லை.
2014ல் பிரதமர் வேட்பாளராகத் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு படை உருவாக்கப்படும். இனி ஒரு மீனவர்கள் மீதும் இலங்கையால் கை வைக்க முடியாது என்றார். தற்போது மோடி பிரதமராக உள்ள நிலையில், 90க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை வெளியுறவுத்துறை அமைச்சரே தெரிவித்திருக்கிறார். துப்பாக்கிச்சூடும், படகுகள் பறிப்பும் தொடர்கிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க. கிளப்பியதுடன், மோடி அவர்களால் கச்சத்தீவு மீட்கப்படும் என்றும் சொன்னது. ஆனால், இலங்கை அதிபரோ கச்சத்தீவு பற்றி நாங்கள் இதுவரை எதுவும் பேசவில்லை எனச் சொல்லிவிட்டார்.
ஆளில்லா கச்சத்தீவில் ஆளாளுக்கு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை செல்லும் பிரதமர் என்ன செய்கிறார் என்று அரசியல் வட்டாரம் எதிர்பார்க்கிறது. மீனவர்கள் தங்கள் பிழைப்பைப் பார்க்கப் போய்விட்டார்கள்.