
இந்திய அரசியலில் தமிழ்நாடு எப்போதும் வித்தியாசமானது. இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பில் தொடங்கி, மாநிலக் கட்சியின் ஆட்சி உள்பட தமிழ்நாட்டின் அரசியல் தாக்கம் டெல்லியை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. தி.மு.க.தான் இந்தியாவில் முதன்முதலாக மாநிலத்தில் ஆட்சியமைத்த மாநிலக் கட்சியாகும். அண்ணா முதல்வரான போது, இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்துதான் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. எனினும், பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் திட்டங்கள் குறித்து உரையாடினார் அண்ணா. அதன்பின், அண்ணா உடல்நலன் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, மாற்றுக்கட்சித் தலைவர் என்று நினைக்காமல், அமெரிக்காவுக்கு அரசு முறையாக சென்றிருந்த பிரதமர் இந்திராகாந்தி அண்ணாவை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலன் விசாரித்தார்.
அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க.வின் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதிதான் தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர். அவருடைய 19 ஆண்டுகால ஆட்சியில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். ஏறத்தாழ எல்லோரையும் அவர் சந்தித்து, தமிழ்நாட்டின் நலன் குறித்து உரையாடியிருக்கிறார். இதில் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் மட்டும்தான் கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை. ஆனால், ராஜீவையும் பிரதமர் என்ற முறையில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை வரை கலைஞர் கருணாநிதி பேசினார்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மொரார்ஜி தேசாய், சரண்சிங், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்துள்ளனர். டெல்லியில் யார் பிரதமராக இருந்தாலும் அவர்களுடன் இணக்கமான நிலைப்பாடு என்பதையே எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக கொண்டிருந்தார். ஒரு மாதகாலம் மட்டுமே அதிகாரப்பூர்வ பிரதமராக இருந்த சரண்சிங் அரசுக்கும் எம்.ஜி.ஆர். ஆதரவளித்து தன் கட்சி சார்பில் இரண்டு பேரை மத்திய அமைச்சர்களாகவும் ஆக்கினார்.
ஜெயலலிதா நிலைப்பாடு என்பது அவருடைய மனநிலையைப் பொறுத்தது. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகியோர் அவருடைய ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளனர். இதில் மன்மோகன்சிங் அரசுடன் அவருக்கு கூட்டணியோ நல்லுறவோ இல்லை. நரசிம்மராவுடன் கூட்டணி இருந்தபோதே அவரை விமர்சித்துள்ளார். வாஜ்பாய் முதன்முதலாக ஜெயலலிதா ஆதரவுடன்தான் ஆட்சியமைத்தார். அதன்பிறகு வாஜ்பாய் பட்டபாட்டை அவரே விளக்கியுள்ளார். குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது, அந்த மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு ஆதரவளித்த ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதாதான். அதே ஜெயலலிதா, மோடியா-லேடியா என்று கேட்டதும் உண்டு. எல்லாமும் அவருடைய தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள் சார்ந்தவையே.
எதிர்பாராத சூழலால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 4 ஆண்டுகளும் பிரதமர் மோடி அரசுக்கு கட்டுப்பட்டு நடந்தார். ஜெயலலிதா ஒப்புக்கொள்ளாத நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு அடிபணிந்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி அரசு. தமிழ்நாட்டில் பா.ஜ.க. தன்னுடைய கிளைகளைப் பரப்புவதற்கு ஏற்ப, 50 ஆண்டுகால கட்சியான அ.தி.மு.க.வை பலி கொடுத்ததும் அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களிலேயே தன்னுடைய நான்காண்டு கால ஆட்சியை நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சியிலும் மத்தியில் ஆட்சி நடத்தும் கட்சிக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டுடன் அரசியல் நடத்தும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். இதற்கு முன் தமிழ்நாட்டிலும் மத்திய அரசிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்த காலத்திலும் தமிழ்நாட்டைத் திட்டமிட்டு பழிவாங்கியதில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணிக்கின்ற நிலையில், மாநில உரிமைகளுக்காக சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது தமிழ்நாடு அரசு. மோடிக்கு எதிராக இந்திய அளவில் கூட்டணியை அமைத்ததிலும் மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியத்துவமானது. இத்தகைய நேரடி எதிர்ப்பும் பழிவாங்கலுமே இதுவரை தமிழ்நாடு கண்டிராத நிலையில், பிரதமருடன் முதல்வர் சந்திப்பு நடத்தும் போதெல்லாம் அது அரசியல் ரீதியான பரபரப்பை ஏற்படுத்துகிறது.
நிதி ஆயோக் கூட்டம் என்பது முந்தைய மத்திய அரசின் திட்ட கமிஷன் கூட்டத்தைப் போன்றது. அண்ணா முதல் ஜெயலலிதா வரை பல முதலமைச்சர்களும் அதில் கலந்துள்ளனர். மத்திய அரசுடன் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிப்பது மரபு. சோஷியல் மீடியா உலகத்தில் அதெல்லாம் வெறும் மீம்ஸ். இவ்வளவுதான் இன்றைய அரசியல்.