
கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் திரும்பவும் கரைக்கு வருவது என்பது இலங்கை கடற்படையினர் கையில்தான் இருக்கிறது என்கிற அவலம் நெடுங்காலமாக தொடர்வது வேதனை.
எல்லை மீறி மீன் பிடிப்பதாகச் சொல்லி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிப்பதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை அடித்து விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் என தொடர்ந்து தனது அராஜகப் போக்கை கடைப்பிடித்து வருகிறது இலங்கை கடற்படை.
இலங்கை கடற்படையினருக்கு அஞ்சியே மீன் பிடிக்க செல்ல வேண்டிய நிலையை மாற்றக்கோரி அவ்வப்போது மீனவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஆனால், மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அலட்சியப்போக்கையே கையாண்டு வருகின்றது.

தமிழக மீனவர்களின் விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் இலங்கை கடற்படையினருக்கு ரொம்பவே வசதியாகப் போய்விடுகிறது. இது இந்திய மீனவர்களின் பிரச்சனை என்று நினைக்காமல், தமிழக மீனவர்களின் பிரச்சனை என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது மத்திய அரசு எனும் குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர் மீனவர்கள். தமிழக முதல்வரும் கூட, ‘’ ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும்’’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனாலும் மத்திய அரசுக்கு இன்னமும் அப்படி ஒரு எண்ணம் வரவே இல்லை. அதனால் தமிழக மீனவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் பறிக்கப்படுவதும் அதிகரித்திருக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலிதான் தற்போது ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் நடந்து வரும் மீனவர்களின் தொடர் போராட்டம்.
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் கோரி உண்ணாவிரத போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தவர்கள், ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் போது இலங்கை சிறையில் இருப்போரை மீட்க அபராத தொகை கேட்பதால் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியும் பார்த்துவிட்டனர். இதன் பின்னரும் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் விரக்தியின் விளிம்பிற்கே சென்று தீக்குளிப்பு போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தனர். முதலமைச்சரின் வேண்டுகோளால் அந்த போராட்டத்தை கடைசி நேரத்தில் கைவிட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களின் நலன் கருதி, இலங்கையில் மீட்க முடியாத நிலையில் உள்ள விசைப்படகுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தொகை 6 இலட்சம் ரூபாயினை 8 இலட்சமாக உயர்த்தி வழங்கவும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தின உதவித்தொகையை 350 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர்,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரில் பேசி தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க பிரதிநிதிகள் குழுவையும் அமைத்துள்ளார்.

’’எந்த ஒரு தமிழக மீனவரும் இனி இலங்கை கடற்படையினரால் தாக்கப் படமாட்டார்கள். அவர்களின் படகுகள் பறிக்கப்படாது. வலைகள் கிழிக்கப்படாது’’ என்று 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மோடி, அதை நிறைவேற்றவே இல்லை. அதனால்தான், ’’பாஜக அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் 3,656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி வரையிலும் இலங்கை கடற்படையினர் 736 முறை தமிழக மீனவர்களை தாக்கி இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்துள்ளார்’’ என்று குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர்.
’’எல்லை தாண்டி வந்து எங்கள் கடல் வளத்தை அள்ளிச் செல்கிறார்கள். இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி சிறிய மீன்களையும் அள்ளிச்சென்று இலங்கை கடல் வளத்தை அழிக்கிறார்கள். இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’’ என்று தமிழக மீனவர்கள் மீது மோசமான குற்றாட்டினை சுமத்தி தப்பித்துக் கொண்டிருக்கிறது இலங்கை கடற்படை. இதை கண்டிக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் வெப்பம் வீசுகிறது தங்கச்சிமடத்தில்.

இவர்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியோ, மத்திய அரசிடம் பேசி பிரச்சனையை தீர்க்க வழி செய்யாமல், கச்சத்தீவு பற்றி பேசி அரசியல் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
’’நாட்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் எங்கள் பிரச்சனைகளை ஏன் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை?’’என்று மீனவர்கள் கேட்பதன் நியாயம் உணர்ந்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது. ஆனால் மத்திய அரசு தீர்வு காண முயற்சிக்கவில்லை என்பதால், ’’இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் காலங்காலமாக தாக்கப்பட்டு வருவது இனியும் தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். பிரதமர் மோடிதான் இந்தப் பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும்’’ என்று அழுத்தமாக குரல் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த முறை விடுவதாக இல்லை. மத்திய அரசு தரப்பில் இருந்து நேரடியாக வந்து தங்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக சொன்னால்தான் போராட்டத்தை கைவிடும் உறுதியில் உள்ளனர் தங்கச்சிமடம் போராட்ட மீனவர்கள்.
பிரதமரே நேரடியாக தலையிட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். அதுவரையிலும் அலையாடும் மீனவர்களின் வாழ்க்கை அல்லாடும் துயரம் நீடிக்கவே செய்யும் நிலை இருக்கிறது.
21hioh