ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சாதனங்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பாகங்களின் உற்பத்தி ஆதிக்கத்தை சீனாவிடம் இருந்து இந்தியா அமைதியாக கையகப்படுத்தி வருவதாக The New York Times தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக ஐபோன் உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகித்து வரும் தைவானைச் சேர்ந்த Foxconn நிறுவனம், தனது 99 சதவீத ஐபோன் உற்பத்தி வணிகத்தை சீனாவில் மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உற்பத்தி தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணியில் Foxconn நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சீனாவின் Zhengzhou நகரில் உள்ளது போல தனது ஊழியர்களுக்கு பிரமாண்டமான தங்குமிட வளாகங்களை கட்டி வரும் Foxconn, ஒவ்வொரு தளத்திலும் 24 அறைகள் கொண்ட 13 கட்டிடங்களை அமைத்து வருகிறது.
சீனாவை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறி தங்களது உற்பத்தியை பிற நாடுகளில் விரிவுபடுத்த நினைக்கும் போது, அந்த நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
உலகளவில் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்களில் சுமார் 13 சதவீத சாதனங்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டதாகும். அதில் நான்கில் மூன்று பங்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அடுத்த ஆண்டுக்குள், இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் அளவு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிய இந்தியாவில், அதன் இளமைப்பருவ தொழிலாளர் மக்கள்தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவர்களில் பாதி பேர் இன்னும் விவசாயத்தையே நம்பியுள்ளனர்.
ஆனால், தமிழ்நாடு அதில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவை தவிர்த்துப் பார்த்தால், 7.2 கோடி மக்கள் வாழும் மாநிலமான தமிழ்நாடு, பல்வேறு வழிகளில் வெற்றிபெற்று வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு இந்திய அரசு மானியம் வழங்குவதாக அறிவித்து, நொய்டா போன்ற இடங்களை முன்நிறுத்தியது.
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அந்த மானிய அறிவிப்பு அவசியமானது இல்லை. கல்வி, போக்குவரத்து, பொறியியல் பட்டதாரிகள் என மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எடுத்துரைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் நாங்கள் ஒருபோதும் ஒப்பிடுவதில்லை என்று கூறிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஸ்காண்டினாவியா நாடுகளின் வளர்ச்சியுடன் மாநிலத்தை ஒப்பிட்டு அதன்படி வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மொத்த பெண் ஊழியர்களில் சுமார் 43% சதவீதம் பேர் தமிழ்நாட்டில் பணிபுரிவதாக மாநிலத்தின் பெருமையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே தொழில்துறையில் சாம்பியனாக செயல்பட்டு வருகின்றன. சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் die-casting மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகள், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் நிபுணத்துவம் பெற்றவை.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 130-க்கும் மேற்பட்ட Fortune 500 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இன்னும் மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த Corning நிறுவனம், ஐபோன் சாதனங்களுக்கு தேவைப்படும் கொரில்லா கிளாஸ் பாகத்தை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த Vinfast நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை தயாரிக்க $2 பில்லியன் முதலீடுகளை அறிவித்துள்ளது.
விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களை மட்டும் ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறை அதிகாரிகளுடன் இணைந்து மலிவு பொருட்கள் முதல் அனைத்து விதமான உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு, The New York Times செய்தி தளத்தில் தமிழ்நாட்டின் தொழில்துறை பாராட்டி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.