முதன்முறையாக, தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் செக்யூரிட்டி, மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் உடனடியாக வேலை வாய்ப்புகளைப் பெறும் வகையில் புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்த சூழலில், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப பாடங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) ஈடுபட்டு வருகிறது.
தற்போது 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 403 தனியார் பாலிடெக்னிக் நிறுவனங்கள் என மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன.
10-ம் வகுப்பில் தகுதி பெற்ற மாணவர்கள் AI, சைபர் செக்யூரிட்டி, மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகியவற்றில் டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்ள தகுதியானவர்கள் என்று DOTE இயக்குநரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இந்தப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்க பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை DOTE இயக்குநரகம் நடத்தி வருகிறது.
புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ததோடு நிறுத்தாமல், மாணவர்கள் தகுந்த வேலை வாய்ப்புகளை பெற உறுதி செய்ய பல்வேறு தொழில் நிறுவனகளுடன் DOTE இயக்குநரகம் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
News Source: DT Next