அரியானா மாநிலத்தில் நடந்த தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டு மாடல் பெண்மணி ஒருவர் பெயர் பல இடங்களில் இடம்பெற்று இருந்ததை சுட்டிக்காட்டி தேர்தல் மோசடி அம்பலப்படுத்தி இருக்கிறார் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தமிழ்நாட்டில் 18 வயது நிறைந்தவர்கள் யாரும் தற்போதைய நிலையில் வாக்காளர்களாக இல்லை. முதலமைச்சர்-அமைச்சர்கள்-எதிர்க்கட்சித் தலைவர் எல்லாரும்தான். எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வுப் படிவத்தை நிறைவு செய்து கொடுத்து, அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து, வரைவு வாக்காளர் பட்டியலை டிசம்பர் 9ஆம் நாள் வெளியிடும்போதுதான் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களிப்போரும் தாங்கள் வாக்காளர்களாக இருக்கிறோமா, 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் முதல்கட்டமான புதுப்பிப்பு படிவத்தில் வாக்காளரின் பெயர், முகவரி, வாக்குச்சாவடி விவரம், வாக்காளர் வரிசை எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். அதில் கேட்கப்பட்டிருக்கும் மற்ற விவரங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து தரவேண்டும்.
நவம்பர் 4ஆம் நாளன்று எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைத் தொடங்கியது தேர்தல் ஆணையம். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பி.எல்.ஓ எனும் அலுவலரை நியமித்து, வீடு வீடாக சென்று வாக்காளர் புதுப்பிப்பு படிவம் வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த பி.எல்.ஓக்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பாக நிலை முகவர்களான பி.எல்.ஏ-2 தொடர்புகொண்டு, படிவம் விநியோகத்தை உறுதி செய்துகொள்ளலாம். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தை நிரப்புவதில் உதவி செய்து, அவற்றை ஒரு நாளைக்கு 50 படிவங்கள் என்ற அளவில் பி.எல்.ஓ.க்களிடம் கட்சிகளின் பி.எல்.ஏ.2 முகவர்கள் ஒப்படைக்கலாம்.
ஒவ்வொரு கட்சியின் பி,எல்.ஏ.2வுக்கும் அவர்களின் பி.எல்.ஓ பெயர் என்ன, அவர்களின் தொடர்பு எண் என்ன என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எஸ்.ஐ.ஆரின் முதல் நாளான நவம்பர் 4ஆம் தேதி, தங்கள் வாக்குச்சாவடியின் பி.எல்.ஓ.க்களை கட்சியின் பி.எல்.ஏ.2க்கள் தொடர்பு கொண்டபோது,“எங்களுக்கு இருக்கிற வேலைப்பளுவில் பி.எல்.ஓ.வாக பணி செய்ய முடியாது. வேறு ஆளுக்கு மாற்றிக் கொடுக்கச் சொல்லிவிட்டேன். புது ஆள் போட்டதும் அவரை கான்டாக்ட் பண்ணிக்குங்க” என்று பெரும்பாலான பி.எல்.ஓ.க்களிடமிருந்து பதில் வந்தது.
முதல்நாளன்று வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய புதுப்பிப்பு படிவங்களும் முறையாக வழங்கப்படவில்லை. ஒரு வீட்டில் 4 வாக்காளர்கள் இருந்தால், அவர்களின் பெயர், வாக்குச்சாவடி எண், வாக்காளர் வரிசை உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட புதுப்பிப்பு படிவம் 2 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. “எங்களிடம் இதைத்தான் தேர்தல் அலுவலகத்தில் கொடுத்தார்கள். மற்றவர்களுக்கு அப்புறம் தருவோம். இல்லையென்றால் நீங்கள் போய் விசாரித்துக் கொள்ளுங்கள்“ என்று வாக்காளர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
இது குறித்து, கட்சிகளின் பி.எல்.ஏ.2க்களிடம் வாக்காளர்கள் தெரிவித்த நிலையில், அவர்களுக்கும் பி.எல்.ஓ. தரப்பிலிருந்தோ தேர்தல் ஆணையத் தரப்பிலிருந்தோ சரியான பதில் இல்லை. எஸ்.ஐ.ஆர் செயல்பாட்டின்படி ஒரு மாதத்திற்குள் புதுப்பிப்புப் படிவங்களை நிரப்பும் பணியை அனைத்து வாக்காளர்களிடமும் நிறைவு செய்திருக்க வேண்டும். படிவத்தைப் பூர்த்தி செய்யாத வாக்காளர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. இப்படி ஒரு நெருக்கடியான சூழலும், ஒரு மாத காலம் எனும் குறுகிய அவகாசமும் கொண்ட எஸ்.ஐ.ஆர். திட்டத்தில் ஒரு நாள் வீணாவது என்பது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எஸ்.ஐ.ஆர் என்பது உண்மையான வாக்காளர்களைத் தக்கவைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையா? இருக்கின்ற வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கான ரகசிய திட்டமா என்கிற அரசியல் கட்சிகளின் சந்தேகக் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. முதன் முதலில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பீஹார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் அதே அச்சம் ஏற்பட்டது. எனினும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் அனுபவம் காரணமாக, பாக நிலை முகவர்கள் எனப்படும் பி.எல்.ஏ.2க்கள் மூலம் வாக்காளர்கள் நீக்கத்தைத் தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், புதுப்பிப்பு படிவத்தை முறையாக வழங்க வேண்டிய தேர்தல் ஆணையம், அதற்காக நியமிக்கப்படும் பி.எல்.ஓக்கள் பட்டியலிலேயே பல குளறுபடிகள் செய்திருப்பதும், பி.எல்.ஓக்கள் இந்தப் பணியை கவனிக்க மறுப்பதும், தமிழ்நாட்டிற்காகத் தேர்தல் ஆணையம் உருவாக்கிய ஸ்பெஷல் நீக்க ஸ்கீமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
வடகிழக்குப் பருவ மழைக்காலத்தில் எஸ்.ஐ.ஆர் திட்டத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தியே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதும், எஸ்.ஐ.ஆர் செயல்பாட்டுக்கான முதல் ஸ்டெப்பிலேயே குழப்பங்களை ஏற்படுத்தி, வாக்காளர்களை பதைபதைக்க வைத்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் எஜமான விசுவாசத்தின் வெளிப்பாடோ?
